வியாழன், 14 ஏப்ரல், 2022

உறவின் ரகசியங்கள்!


முன்னுரை:

"உறவின் ரகசியங்கள்"என்ற இந்த சிறிய புத்தகத்தை இந்த உலகில் கலப்பற்று உறவாட நினைக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்காகவும் தொகுத்துவருகின்றேன்.அந்த புத்தகத்தில் உறவுகள் என்றால் என்ன .?என்பதையும் அது எங்கிருந்தெல்லாம் தோன்றுகின்றது என்பதையும் என் சிந்தைக்கு உட்பட்டு மிக விரிவாக விளக்கி இருக்கின்றேன்.அவ்வாறே மக்கள் எதையெல்லாம் உறவாடுவதற்கான அளவுகோலாக எடுத்துக்கொள் கின்றார்கள் என்பது குறித்தும் அவற்றின் உண்மை நிலை என்ன என்பது குறித்தும் மேலும் எத்தகைய உறவுகளெல்லாம் தோற்றுப்போகின்றது என்பது குறித்தும் மிக விரிவாகவே விவரித்து இருக்கின்றேன்.நிச்சயமாக அந்த சிறிய புத்தகம் இந்த மனித சமூகத்துடன் உறவை மேம்படுத்த விரும்பும் அனைவருக்கும் மிக பயனலிக்கக்கூடியதாக அமையும் என்றே ஆதரவு வைக்கின்றேன்.இப்பொழுது அப்புத்தகத்தின் ஒரு சில பகுதியயி மட்டும் இந்த கட்டுரையில் தருகின்றேன்.தொடர்ந்து வாசித்து வாருங்கள்..

நாம் உறவின் பல்வேறு ரகசியங்களை அறிவதற்கு முதலில் உறவு என்றால் என்ன என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பதால் இங்கு உறவு என்றால் என்ன என்பதற்கு மொழி ரீதியான மேலும் அகராதி ரீதியான பொருள் என்ன என்பதை விளக்குவதே மிகப்பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகின்றேன்.எனவே முதலில் உறவு என்றால் என்ன என்பது சம்மந்தமாக மொழியின் அடிப்படையிலும் அகராதியின் அடிப்படையிலும் சிறியதோர் அறிமுகத்தை இங்கு பதிவிட்டுவிடுகின்றேன்.

உறவு என்றால் என்ன..?

உறவு என்ற சொல்லிற்கு பெரும்பாலும் அகராதியில் :

"இரு மனிதர்களுக்கு மத்தியில் ஏற்படும் தொடர்பு என்றும் இரு மனிதர்களுக்கு மத்தியில் ஏற்படும் இசைவு அல்லது பிணைப்பு" என்றுமே பொருள் கொள்ளப்படுகின்றது.இவற்றை தவிர்த்து இரு நபர்கள் திருமண ஒப்பந்தத்தின் அடிப்படையில் அல்லது அன்பின் அடிப்படையில் உடலால் இணைவதற்கும் மேலும் இரு நபர்கள் இரத்தபந்தத்தால் இணைவதற்கும் உறவு என்றே பொருள் கொள்ளப்படும் என்பதாகவும் அகராதியில் நம்மால் காணமுடிகின்றது.இவை உறவு என்பதற்கு மொழி மற்றும் அகராதி ரீதியிலான விளக்கமாகும். இவையன்றி உறவு என்பதற்கு சமூகம் எத்தகைய பொருள் கொள்கின்றது என்பது சம்மந்தமாகவும் நாம் அறிந்து கொள்வது என்பது உறவின் பல்வேறு ரகசியங்களை ஆழமாக நாம் அறிந்து கொள்வதற்கு மிக உதவியாக இருக்கும் என்பதால் அதனையும் சற்று வட்டுறுக்கமாக இங்கு விவரித்துவிடுகின்றேன்.

உறவு சம்மந்தமான சமூக புரிதல் என்ன..?

மக்களில் பலரும் உறவு என்பது வெறும் திருமண ஒப்பந்தத்தாலும் அல்லது இரத்த பந்தத்தாலும்  ஏற்படுவது மட்டுமே என்று தங்களுக்கு தாங்களே நினைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் தங்களை தாங்களே போட்டுக்கொள்வதையே இன்றைய நிதர்சன வாழ்வில் நாம் பெரும்பாலும் காண முடிகின்றது.பெரும்பான்மையான மக்களின் இந்த புரிதலே பெரும்பாலும் மனிதர்களோடு பொதுவாக பேசுவதையோ அல்லது பழகுவதையோ தவிர்த்துக் கொள்வதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்துவிடுகின்றது என்றே நான் கருதுகின்றேன்.

இத்தைகைய புரிதல்தான் பெரும்பான்மையான மனிதர்களை தூரப்படுத்துவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றது என்றும் நான் நம்புகின்றேன்.ஏனெனில் இத்தகைய புரிதல் உடையவர்கள் வெளிப்படையாகவே தன் ரத்தபந்தமல்லாத அல்லது திருமணபந்தமல்லாத பிறமனிதர்களை வெறுத்து ஒதுக்குவதற்கே முற்படுகின்றனர்.மேலும் அவ்வாறு செயல்படுவதையே அவர்களுக்கான பாதுகாப்பாகவும் அவர்கள் எண்ணிக்கொள்கின்றனர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கின்றது என்பதையும் நான் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கின்றேன்.

உண்மையில் இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததுதான் என்றாலும் இங்கு தான் உறவின் சில வகைகளை அவர்கள் உணரத்தவறுகின்றனர் என்பதாகவும் கருதுகின்றேன்.மேலும் மேம்போக்கான அவர்களின் தவறான புரிந்துணர்வால் பெரும்பான்மையான மக்களிடம் தெரிந்தோ தெரியாமலோ வெறுப்பை மட்டுமே வேறூன்றச் செய்துவிடுகின்றனர் என்பதையும் இங்கு உலவியல் உண்மையாக நான் வறுத்தத்தோடு பதிவு செய்கின்றேன்.அதாவது உறவு என்பது தொடர்பினாலும் சந்திப்பினாலும் மேலும் அவற்றில் ஏற்படும் ஆழமான புரிதலாலும்தான் உறுவாகின்றது என்ற உண்மையை மறந்து இரத்த உறவுகள்தான் தொடர்பையும் ,சந்திப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் தங்களுக்கு தாங்களே தவறான புரிதலை கேடயமாக்கிக் கொண்டது என்பது மிக வருத்தத்திற்குறிய விஷயமாகும் என்றே நான் கருதுகின்றேன்.

அவ்வாறே அவர்கள் உறவு என்றாலே அது தன்னை முழுவதுமாக ஒப்படைக்க கூறும் திருமண உறவு மட்டும்தான் என்றும் அல்லது தங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் இடமளிக்கும் அளவிற்கான ஆழமான உறவு என்பது மட்டும்தான் என்றும் தங்களுக்கு தாங்களே ஒரு தவறான புரிதலை ஏற்படுத்திக் கொண்டது என்பதும் மிக வருந்தத்தக்க செயலாகவே நான் கருதுகின்றேன்.இந்த தவறான புரிந்துணர்வே பெரும்பாலும் ஏனைய மனிதர்களை அவர்கள் வெளிப்படையாகவே புறக்கணிப்பதற்கான முக்கிய காரணியாகவும், உலவியல் உண்மையாகவும் அமைந்திருக்கின்றது என்பதை என்னால் அருதியிட்டுக் கூற முடியும்.எனவே இத்தகைய மனித விரோத புரிதலையே முதலில் கலைய வேண்டிய அவசியமிருக்கின்றது என்ற அடிப்படையில்  இங்கு மக்கள் பெரிதும் கவனத்தில் கொள்ளாத சில உறவுகளின் வகைகளை விளக்க வேண்டிய அவசியமிருக்கின்றது என்றே நான் உணர்கின்றேன்.அவற்றை இங்கு பதிவு செய்வது மனிதத்தோடு உறவாட விரும்பும் அனைவருக்கும் மிக பிரயோஜனம் மிக்கதாக இருக்கும் என்றும் கருதுகின்றேன்.எனவே வாருங்கள் மக்கள் தங்கள் வாழ்வில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய உறவின் சில வகைகளை முதலில் அறிந்து கொள்வோம்...!

உறவின் வகைகள்..!

1.பொதுவான உறவு.

2.தனிப்பட்ட உறவு.

3.ஆழமான உறவு.

இந்த மூன்று வகையான அனுகுமுறையையும் இன்றைக்கு நம்மில் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே கடைபிடித்து வருவது என்பது உண்மையில் ஆச்சர்யப்படத்தக்கதாகும்.ஆம் நம்மில் ஒவ்வொருவரும் இந்த மூன்று வகையான அனுகுமுறையையும் உறவில் கடைபிடித்துக்கொண்டே இருக்கின்றோம்.ஆனால் அதனை எப்படி கடைபிடிப்பது யாரிடம் கடைபிடிப்பது என்பதில் தான் பெரும்பாலோர் தவறிழைத்துவிடுகின்றனர். அந்த அனுகுமுறைகளை நாம் மிக இலகுவாக புரிந்து கொள்வதற்கு நம் வாழ்வில் நாம் அன்றாடம் கடைபிடித்து வரும் பேச்சை உதாரணமாக சுட்டிக்காட்டுவது இங்கு மிகப்பொறுத்தமானதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.எனவே அவ்வுதாரணத்தின் மூலமே விளக்குவதற்கு முயற்சிக்கின்றேன்.

பொதுவாகவே நம்முடைய பேச்சில் மூன்று வகையான அனுகுமுறைகள் பொதிந்து இருக்கின்றது.அவற்றில் 1.பொதுவான பேச்சு என்ற ஒன்றும்,2.தனிப்பட்ட பேச்சு என்ற ஒன்றும்,3.ஆழமான(இரகசிய) பேச்சு என்ற ஒன்றும் எப்பொழுதும் இருக்கவே செய்கின்றது.இது நாம் எல்லோரும் நமக்கு தெரியாமலே நம்முடைய பேச்சில் கடைபிடித்து வரும் ஒரு சாதாரண செயல்தான் என்றாலும் இதனை பலரும் தெரிந்து கடைபிடிப்பது கிடையாது. அவ்வாறே இதனை எப்படி கடைபிடிப்பது என்பதிலும், யாரிடம் கடைபிடிப்பது என்பதிலும் பெரும்பாலானோர்  தவறிழைத்துவிடுகின்றனர் என்பது எனது கண்ணோட்டமாகும்.

அது எப்படி மக்கள் இது விஷயத்தில் தவறிழைக்கின்றார்கள் என்று நீங்கள் கூறுகின்றீர்கள் என்று என்னைப்பார்த்து நீங்கள் கேட்கலாம். அவசரப்படாதீர்கள்..!அதற்கான விளக்கத்தை இங்கு நான் முழுவதுமாக குறிப்பிடுகின்றேன்.

அன்றாட பேச்சும் உறவின் அனுகுமுறையும்..!

நான் மேலே கூறிய மூன்று வகையான பேச்சுக்களையும் உங்கள் மனதில் நன்றாக நினைவில் நிறுத்திக்கொண்டு உங்கள் பொதுவாழ்வில் நீங்கள் எப்படி பேசுகின்றீர்கள் என்பதை சற்று ஆழமாக உற்று நோக்கிப்பாருங்கள். ஒன்று நீங்கள் எல்லோரோடும் ஒரேவிதமாக பேசுபவராக இல்லாமல் இருக்கலாம்.அல்லது எல்லோரிடமும் ஒரே விதமாக பேசுபவராக இருக்கலாம். ஒருவேலை இந்த இருவகையினரில் நீங்கள் எல்லோரிடமும் ஒரே விதமாக பேசும் இரண்டாவது வகையினராக இருந்தால் நீங்கள்தான் நான் மேலே கூறிய அந்த தவறிழைக்கும் நபர்கள் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.மேலும் நீங்கள் சந்திக்கும் மக்கள் ஒரே மாதிரியானவர்கள் இல்லை என்பதையும் மேலும் நீங்கள் புரிந்து கொள்ளாதவர்களாகவே இருக்கின்றீர்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

அடுத்த பதிவில் தொடர்வோம்:

Previous Post
Next Post