![]() |
| முஸ்லிம்கள் ஏன் ஈத் பெருநாளை கொண்டாடுகின்றனர்? |
முன்னுரை:
இந்த உலகில் எல்லா மதங்களுக்கும் எல்லா இனங்களுக்கும் எல்லா குழுக்களுக்கும் எல்லா சமூகத்திற்கும் மனம் மகிழ்ந்து கொண்டாடுவதற்கென்று ஒரு நாள் நிர்னயிக்கப்பட்டிக்கின்றது. அந்நாளில் அம்மதத்தைச் சார்ந்த அல்லது அவ்வினத்தைச்சார்ந்த அல்லது அக்குழுவைச்சார்ந்த மக்கள் தங்கள் முழு சக்தியையும் செலவழித்து கோலாகலமாக கொண்டாடியும் மகிழ்கின்றனர்.சிலர் அப்படி கொண்டாடி மகிழ்வதற்கான காரணங்களை குறிப்பிடுகின்றனர்.சிலர் அவற்றிற்கான காரணம் இல்லையானாலும் வாழையடி வாழையாக பின்பற்றிவருகின்றனர். அந்த வகையில் வருடாவருடம் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பிற்கு பிறகு ஈத்பெருநாள் (அதாவது ஈகை திருநாள்)என்ற தினத்தை மிக கோலாகலமாக கொண்டாடி வருவதை நாமெல்லாம் காணமுடிகின்றது.அப்படி அவர்கள் கொண்டாடுகையில் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி முகமன் வாழ்த்து கூறியும், பரிசுப் பொருட்கள் வழங்கியும் தங்கள் மகிழ்சியை வெளிப்படுத்திக்கொள்கின்றனர்.
இவ்வாறு குறிப்பிட்ட ஒருநாளை இஸ்லாமியர்கள் ஏன் கொண்டாடுகின்றனர் என்றும் அதற்கு ஏதேனும் முக்கிய காரணம் இருக்கின்றதா என்றும் ஒருசில நண்பர்கள் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.என்னால் முடிந்தளவு அவற்றின் காரணத்தை எளிய வடிவில் இங்கு பதிவு செய்ய முயல்கின்றேன்.இக்கட்டுரையை நீங்கள் வாசித்து பயன் பெறுவதோடு உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து பயன்பெறச் செய்யும்படி அன்போடு வேண்டிக்கொள்கின்றேன்.
இஸ்லாமிர்கள் ஏன் ஈத் பெருநாளை கொண்டாடுகின்றனர்?
முதல் காரணம்:
அடிப்படையில் இஸ்லாமியர்கள் ரமலான் எனும் புனிதமிகு மாதத்தில் 30 நாட்களும் தங்களின் இறைவனுக்காக பசித்திருந்து பல்வேறு மனோ இச்சைகளையும் தவிர்த்திருந்து இறைவழிபாட்டில் திழைத்திருப்பதென்பது இறைவன் அவர்களுக்கு வழங்கிய மாபெரும் பாக்கியமாக கருதுகின்றனர். எனவே அத்தகைய பாக்கித்தை முழுமையாக வழங்கிய இறைவனுக்கு நன்றி கூறும் வண்ணமே இத்தகைய ஈத்பெருநாளை இறைவனுக்கு நன்றி கூறும் திருநாளாக இஸ்லாமியர்கள் கொண்டாடிவருகின்றனர்.
இரண்டாவது காரணம்:
இந்த குறிப்பிட்ட நாளை கொண்டாடும் இஸ்லாமியர்கள் தாங்கள் புத்தாடை அணிந்து,சிறந்த உணவுகளை உட்கொள்வதற்கு முன்பே பிற ஏழைகளுக்கும்"ஈதுல் ஃபித்ர்" என்னும் பசியை தீர்க்கும் தானதர்மங்களை செய்து பிறமனிதர்களையும் மகிழ்வித்துவிட வேண்டும் என்று போதிப்பதால் இந்நாளை கொண்டாடி மகிழ்கின்றனர்.இதன் மூலம் பசித்திருத்தளின் வலியையும் பிற ஏழைகளுக்கு பசியாற்ற வேண்டிய கடமையையும் கற்றுணர்கின்றார்கள்.ஏழை எளிய மக்களின் பசியாற்றி மகிழச்சொல்லும் இத்தகைய கொண்டாட்டம் மிக அற்புதமான சமூக வாழ்விற்கு வழிவகை செய்வதால் பல்வேறு சமூக அக்கறை கொண்ட பிறமத நன்மக்களும்கூட இதனை வெகுவிமர்சையாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
மூன்றாவது காரணம்:
இந்த ஈத் பெருநாளில் எல்லா மக்களும் ஒற்றுமையாக ஒரே திடலில் ஒன்று கூடி இறைவணக்கம் புரிந்து ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி மகிழவேண்டும் என்று போதிக்கப்படுவதால் அத்தகைய சகோதரத்துவத்தையும்,மனித நேயத்தையும் காப்பதற்காக இந்நாளை வெகுவாக கொண்டாடிவருகின்றனர். இந்த கொண்டாட்டத்தால் மக்களின் மனங்களில் புதைந்து கிடக்கும் வெறுட்சிகள்,வஞ்சங்கள் நீங்கி அன்பும், அரவணைப்பும் மலர்கின்றது.மேலும் சமூக ஒழுங்கை கட்டமைப்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது என்பதாலும் இஸ்லாமியர்கள் இதனை கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.எனவே இந்த ஈகை திருநாள், வெறும் சடங்கு சம்பிரதாயமாகவோ அல்லது ஏதோ ஒரு மதவழிபாடாகவோ மட்டும் கொண்டாடப்படாமல், மனிதர்களின் மான்புகளை மதிப்பதற்கும்,சமூக அக்கரையோடு இந்த மனித சமூகம் செயல்படுவதற்கும் வலியுறுத்துகின்றது என்பதற்காவே இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்றது.
முடிவுரை:
ஆக கொண்டாட்டம் என்ற பெயரில் தன்னை அழித்துக்கொள்வதையும்,பிற மனிதர்களுக்கு தொல்லை தருவதையும் கோலாகலமாக கொண்டாடப்படும் இன்றைய சூழலில்,இறைவனுக்கு நன்றி செலுத்தி,பிற மனிதர்களுக்கு தர்மம் செய்து மகிழ்விப்பதை போதிக்கும் இத்தகைய ஈகை திருநாள் போற்றப்பட வேண்டும் என்பதே எனது நம்பிக்கையாகும்.மேலும் ரம்ஜான் என்றாலே பிரியாணி என்று பிறமத சகோதரர்கள்கூட போற்றும் அளவிற்கு இந்த ஈகை திருநாளை பசியாற்றும் பெரும் நாளாக தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய பெருமக்கள் நிறூபித்துக்கொண்டுமிருப்பது தமிழக இஸ்லாமியர்களின் ஈகை கொள்கைக்கு மிகப்பெரும் சான்றாகவும் நான் காண்கின்றேன்.இத்தகைய அன்பும், அரவணைப்பும்,சமூக அக்கரையும் கொண்ட கொண்டாட்டம் இந்த மனித குலத்தை சிறந்த புரிந்துணர்வோடு என்றென்றும் காக்கட்டும் என்றும் இதன் வழிநடக்கும் எல்லா மனிதர்களுக்கும் எல்லாம் வல்ல இறைவன் எல்லா நலவுகளையும் வழங்கட்டும் என்றும் என்றென்றும் பிரார்திக்கின்றேன்.
நன்றி: Author.A.Sadam husain hasani
