புதன், 18 மார்ச், 2026

மனிதன் முழுமை பெறவே முடியாதா?Can a person not fulfill him?


முன்னுரை:

என்னுடைய புத்தகத்திற்கு "முழுமை பெற்ற மனிதானக இரு"என்று நான் பெயரிட்டதை வைத்து பல்வேறு நண்பர்களும் ஒரு மனிதன் முழுமை பெறுவது என்பது சாத்தியமற்ற விஷயமாயிற்றே எப்படி நீங்கள் முழுமை பெற்ற மனிதனாக இரு என்று புத்தகம் எழுதுகின்றீர்கள் என்பதாக ஆச்சர்யமாய் கேட்கின்றனர்.இன்னும் சிலர் இந்த உலகில் எந்த மனிதனும் முழுமை பெற்றவனெல்லாம் கிடையாது.எல்லோரும் இங்கு அயோக்கியர்கள்தான் யாரும் இங்கு யோக்கியரில்லை என்று ஆணித்தரமாய் கூறி முற்றிலுமாய் என்னை எதிர்க்கின்றனர்.இத்தகைய எதிர்திசைகளுக்கு விரிவான விளக்கமளிக்க ஒரு எழுத்தாளனாக இங்கு நான் கடமைபட்டிருப்பதை கட்டாயமாக உணர்கின்றேன்.அதன் அடிப்படையில் உலகில் பிறக்கும் ஒரு மனிதன் முழுமை பெறவே முடியாது என்ற முரண்பாட்டிற்கு முதலில் இங்கு விளக்கமளித்துவிடுகின்றேன்.

மனிதன் முழுமை பெறவே முடியாதா?

இந்த உலகில் இறைவனால் படைக்கப்பட்ட அல்லது இயற்கையால் உறுவாக்கப்பட்ட அனைத்துமே தன்னால் முடிந்தளவு தன்னை முழுமைபடுத்திக்கொள்வதற்காகவே  உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்ற பேருண்மையை இந்த மனித சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதையே முதலில் இங்கு நான் சுட்டிக்காட்ட கடமைபட்டிருக்கின்றேன்.

ஆம்..!

சுருங்கிய சுருளிற்குள் சுருண்டுவிடாமல் பீரிட்டு எழுந்து,பசுமை பொழிந்து, பூக்கள் பூத்து,காய்கள் தரித்து,கனிகள் பொழிந்து பிறருக்கு குடையாகவும் தனக்கு நிழலாகவும் கம்பீரமாய் காட்சியளித்து தன்னை முழுமைபடுத்த துடிக்கும் ஒவ்வொரு செடிகொடிகளும் இதற்கு சாட்சி.!

கண்கவரும் வண்ணம் பூசி,கதைகள் கூறும் அறைகள் தொடுத்து,கட்சிதமான ஜன்னல்கள் வைத்து,அதற்கேற்ப திரை சீலையும் தைத்து,வண்ணமயமாய் காட்சிதரும் ஒவ்வொரு பூக்களும் இதற்கு சாட்சி.

இப்படி நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஒவ்வொன்றையும் கவனித்துப்பார்த்தால் அவை அனைத்தும் தன்னை தனித்துவத்தோடு செழுமைப்படுத்தி, முழுமைபடுத்தி, திருப்தியுற்றுக் கொண்டிருக்கின்றது என்பதை கண்ஊடாக கண்டுகொள்ளலாம்.அப்படி இருக்கையில் மனிதன் மட்டும் எப்படி தன்னை செழுமைபடுத்தி முழுமையாக்கிக்கொள்ள முடியாது என்று வாதிடமுடிகிறது என்பதுதான் வேடிக்கையாக உள்ளது.உண்மையில் மனிதன் முழுமை பெறவே முடியாது என்ற வாதம் இந்த உலகில் மனிதன் தறிகெட்டு தான்தோன்றித்தனமாக வாழ்வதை நியாயப்படுத்துவதற்கு வேண்டுமானால் உதவியாக அமையுமே தவிர மனித வாழ்வை மேம்படுத்தவோ அல்லது அவனை மனநிறைவான சுதந்திரத்தோடு வாழவைக்கவோ உதவாது என்பதையே நிதர்சனமாக நான் காண்கின்றேன்.

அவைமட்டுமின்றி தற்போதைய நிலையில் சுய ஒழுக்கங்களும் சமூக அக்கறைகளும் மனித வாழ்வை சிறைப்படுத்தும் பெரும் பாரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.இன்னும் சொல்லப்போனால் தற்போதைய நிலையில் தனிமனித ஒழுங்கிற்கும்,சுதந்திரத்திற்குமான வேற்றுமையை புரிய வைப்பதே மிகப்பெரும் சவாலாக இருக்கின்றது.ஏனெனில் தனிமனித ஒழுங்கைப்பற்றியோ அல்லது யாருக்கும் எவ்விதத்திலும் அநீதி இழைத்துவிடாத சுதந்திரத்தைப்பற்றியோ பேசினால் அவை பழம்பெருமையாகவோ அல்லது சலிப்பூட்டும் வேடிக்கையாகவோ மட்டுமே பார்க்கப்படுகின்றது.இவை ஒருபுறம் இப்படி இருக்க மற்றொரு புறம் மது,மாது,கொலை,கொள்ளை என தறிகெட்டு,பிற மனிதர்களையும் அடக்குமுறைக்குள்ளாக்கி அநீதி இழைப்பதுதான் வாழ்வின் மிகப்பெரும் சாகசம் என்பதாக பெரும்பாலான திரைக்கதைகளால் போதிக்கப்பட்டுள்ளது. அவை பெரும்பாலன மனிதர்களால் போற்றவும்படுகின்றது. 

இப்படி தற்போது எல்லா புறங்களிலும் மனித வாழ்வின் ஒழுங்கின்மையை வரவேற்பவர்களைப் பார்த்து ஒருசில கேள்விகளை இங்கு நான் கேட்க விரும்புகின்றேன்.அதாவது நீங்கள் நடத்தும் ஒரு நிறுவனத்தில் அனைத்தும் ஒழுங்கற்றதாக இருப்பதை நீங்கள் உங்களுக்காக ஏற்றுக்கொள்வீர்களா?முடியாது என்று கூறுவீர்களேயானால் பிறகு எப்படி மனிதனின் ஒழுங்கின்மையை மட்டும் உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகின்றது?மேலும் இந்த உலகில் எதையும் சரிசெய்ய முடியாது என்றும் இங்கு யாரும் ஒழுங்கல்ல என்றும் கூறுவதின் மூலம் இந்த மனித சமூகத்திற்கு நீங்கள் எதனை கற்றுத்தர விரும்புகின்றீர்கள்?

இந்த கேள்விகளுக்கெல்லாம் இந்த மனித சமூகத்தை தட்டழிந்து திரியச்செய்ய நினைக்கின்ற அல்லது இந்த மனித சமூகத்தை வாழ்வின் வெறுட்சியில் சுழலவைக்க நினைக்கின்ற எவரிடமும் ஒழுக்கக்கேடு என்பதை தவிர வேறு எந்த பதிலுமில்லை.ஏனெனில் அவர்கள் ஒழுங்கின்மை என்ற பாதாளக்குழிகளுக்குள் அகப்பட்டுக்கிடக்கின்றார்கள்.அவற்றிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ளும் கடினங்களைக் கண்டு அஞ்சுகிறார்கள். எனவே அவர்கள் மற்றவர்களையும் அதே பாதாளக்குழிகளுக்குள் இழுத்துக்கொள்ள போராடுகின்றார்கள்.

இத்தகையவர்கள் சாலையில் மூவண்ண விளக்குகள் மூலம் சாலைவிதியை கடைபிடிப்பது என்பதுகூட தேவையில்லாதது என்று உறுதியாக நம்புகிறார்கள்.ஆனால் இந்த சாலை விதிகளால் ஒவ்வொரு நாளும் பல்வேறு உயிர்கள் காக்கப்படுகின்றது என்ற பேருண்மையை சீர்தூக்கிப்பார்க்க மறுக்கின்றார்கள்.ஒன் வேயில் (One Way) எதிர்புறமாக சென்றால் மிகப்பெரும் விபத்து ஏற்படும் என்று கூறும் சாலைவிதிகள் இந்த மனித சமூகத்தை காக்கவும் அதனை நாகரீகப்படுத்தவும் உதவுகின்றது என்பதை ஏற்கமறுக்கின்றார்கள்.உண்மையில் இத்தகையவர்கள் இன்றைய சமூகத்திற்கு மிகப்பெரும் சவால் என்பதை சுட்டிக்காட்டுவதோடு இத்தகையவர்கள் மனது வைத்தால் ஒழுங்குற முழுமைபெற்று இவர்களாலும் தங்கள் வாழ்வை வாழமுடியும் என்பது எனது நம்பிக்கையாகும்.

இவற்றைவிடுத்து மனிதர்களுக்கு ஏன் சட்டங்கள்,விதிகள்,ஒழுங்குமுறைகள்?மனிதர்களுக்கு இவை முற்றிலும் அவசியமற்றது என்று கூறிக்கொண்டு மனித வாழ்வின் பல்வேறு புனிதங்களை குழிதோண்டி புதைத்து இந்த மனித சமூகத்தை ஒழுங்கின்மை என்னும் மிகப்பெரும் சாபக்குழியில் தள்ளிவிட நினைப்பவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் நல்வழி காட்டட்டும் என்ற பிரார்த்தனையை மட்டும் இங்கு பரிசளிக்க விரும்புகின்றேன்.அடுத்த கட்டுரையில் இந்த மனிதன் தன்னை எவற்றிலெல்லாம் முழுமைபடுத்திக்கொண்டு மனநிறைவோடு வாழமுடியும் என்பதை விவரிக்கின்றேன்.

முடிவுரை:

இந்த கட்டுரையின் இறுதியாக ஒன்றே ஒன்றை மட்டும் நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதை எனது தாழ்வான கோரிக்கையாக வேண்டிக்கொள்ள ஆசிக்கின்றேன்.அதாவது மனிதனின் முழுமை என்பது சாத்தியமற்றது என்று கூறி தறிகெட்டு வாழச்சொல்வதில் மோசமான உள்நோக்கங்கள் இருக்கின்றதா? அல்லது மனிதன் தனக்காக திருப்திகரமிக்க ஒரு வாழ்வை தேர்ந்தெடுத்து தன்னை செழுமைபடுத்திக்கொள்ள வேண்டும் என்று கூறுவதில் மோசமான உள்நோக்கங்கள் இருக்கின்றதா என்பதை ஒரு கணம் சீர்தூக்கிப்பாருங்கள்.உங்கள் உண்மையான உணர்வுகள் உங்களுக்கு நல்வழி காட்டலாம்.

நன்றி : Author.A.Sadam husain hasani

புதன், 19 அக்டோபர், 2022

அவமானப்படுத்த நினைப்பவர்களை என்ன செய்வது Zen Story


முன்னுரை:

இந்த உலகில் எங்கு சென்றாலும் நம்மை அவமானப்படுத்துவதற்கென்றே ஒருசிலர் இருப்பது இன்றைய சமயத்தில் மிக சாதாரணமான ஒன்றாகிவிட்டது. அவற்றிற்கு யாரும் விதிவிலக்கும் கிடையாது.இப்படி எங்கு சென்றாலும் நம்மை அவமானப்படுத்தவோ அல்லது நம் உணர்வோடு விளையாடவோ பல்வேறு மனிதர்கள் நம்மைச் சுற்றி வலம்வந்துகொண்டே இருக்கின்றனர். அப்படி வேண்டுமென்றே நம்மை வெறுப்பூட்ட நினைக்கும் ஒருவரை நாம் பெறும்பாலும் அடித்தோ அல்லது அவரைவிட மிக மோசமாகவோ நடந்து அவரிடமிருந்து தப்பித்துக் கொள்ள முயற்சிசெய்வோம்.ஆனால் வேண்டு மென்றே நம்மை அவமானப்படுத்த நினைக்கும் ஒருவரை எவ்வாறு கையாளுவது என்பதை முற்கால துறவி ஒருவர் கற்றுக்கொடுத்துவிட்டு சென்றிருப்பதை நம்மால் காணமுடிகிறது.அவற்றை நாம் ஒவ்வொருவரும் அறிந்து வைத்துக்கொண்டால் நம் வாழ்விற்கும் மிக பிரயோஜனமிக்கதாக இருக்கும் என்ற நம்பிக்கையில் அதனை இங்கு நான் பதிவுசெய்கின்றேன்.

துறவியின் கதை:

"அந்த நாட்டிலேயே மிகவும் அமைதியானவர் என்ற பெயரை அத்துறவி எடுத்திருந்தார்.மக்காளால் மிகவும் புகழப்பட்டுக் கொண்டிருந்த அத்துறவியின் மீது ஒருவனுக்கு பொறாமை வந்தது.அவர் எப்படி மக்களிலேயே மிகவும் நல்லவர் என்றும் மிக அமைதியானவர் என்றும் பெயர் பெற்றார்..?அவரை சும்மா விடக்கூடாது என்றும் அவரை நாம் எரிச்சலூட்டினால் நிச்சயம் அவர் உண்மை ரூபம் மக்களுக்கு  வெளிப்பட்டுவிடும் என்றும் எண்ணிக்கொண்டு அத்துறவியின் பெயரை கெடுப்பதற்காகவே அவருடைய மடத்திற்கு வந்தான்.

சீடர்களோடு உரையாடிக்கொண்டிருந்த துறவியை பார்த்து மிக மோசமான வார்த்தைகளால் திட்டினான்.ஆனால் துறவி அவனுடைய வார்த்தைகளை காதிலேயே எடுத்துகொள்ளவில்லை.பிறகு துறவியை நேராக பார்த்து அடே கிழவா,அசிங்கம் பிடித்தவனே,முட்டாளே இங்கே வாடா என்றான்.மாணவர்கள் அனைவரும் கோபமுற்று எழுந்தார்கள்.ஆனால் அத்துறவியோ அமைதியாக அமருங்கள் என்று கூறிவிட்டு வெளியில் வந்து "ஏனெப்பா ஏன் இப்படி தொண்டை வலிக்க கத்துகின்றாய்..?இதோ இந்த தண்ணீரை அருந்து என்று துறவி சாந்தமாக தன் கையிலிருந்த குவளையை கொடுத்தார்.ஆனால் அவன் அதனை வாங்கி தூக்கி எறிந்துவிட்டு  நான் உன்னை இவ்வளவு கேவலமாக திட்டுகின்றேனே உனக்கு சுரனையே இல்லையா..?என்று துறவியைப்பார்த்து கேட்டான்.

அதற்கு அத்துறவியோ புன்னகைத்துக் கொண்டே " நாம் ஒருவருக்கு வழங்கும் பரிசை அவர் பெற்றுக்கொண்டால் தானே அது அவருக்கு சொந்தம்..!அதை அவர் பெற்றுக்கொள்ளவில்லையானால் அது அந்த பரிசளித்தவருக்கே சொந்தமாகிவிடுமல்லவா என்று  அவனைப்பார்த்துக்கேட்டார்.வாலிபனோ சொல்வதறியாமல் நின்றான்..!நிலைதடுமாறிய அவ்வாலிபனை தோளில் தட்டிக் கொடுத்து வாலிபனே என்னை நான் யாரென்று உன்னைக்காட்டிலும் அறிவேன் எனவே என்னை திட்டுவதில் உன் பொன்னான சக்தியை வீணடிக்காதே என்று உபதேசித்தார்.அவ்வாலிபனும் தான் செய்த தவறை ஒப்புக்கொண்டு துறவியிடம் மன்னிப்பு வேண்டினான்.மேலும் அத்துறவியிடமே சீடனாகவும் ஆனான் என்றும் அக்கதை முடிகின்றது.

நீதி:

  • இங்கு பலரும் நம்முடைய பொறுமையை சோதிப்பதற்கென்றே திரிகிறார்கள் என்பதை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும்.
  • நம்மை அவமானப்படுத்துவதையே குறிக்கோளாக கொண்டு நம்மை திட்டுபவர்களுக்கு நாம் எந்த பதிலும் அளிக்கத்தேவையில்லை.ஏனெனில் நாம் பதிலளிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் அற்ப ஆசையாக இருக்கும்.எனவே அத்தவறை நாமும் செய்துவிடக்கூடாது.
  •  நாம் நம்மைபற்றி நன்றாக அறிந்து வைத்திருக்கும்பொழுது நம்மை தாழ்த்த நினைப்பவர்களிடம் சென்று நம்மை உயர்த்திக்காட்ட எந்த அவசியமுமில்லை.அவர்களுக்கு விளக்கமளிப்பதைவிட விலக்கி வைப்பதே மேலானது.
  • நம்மை வெறுப்பூட்ட நினைப்பவர்களையும் மனிதர்களாக மதித்து செயல்பட வேண்டும்.

புதன், 29 ஜூன், 2022

உறக்கமும் உடல் ஆரோக்கியமும்-healthy-sleeping


உறக்கம் ஒரு உன்னத செயல்.

இந்த உலகை சம்பாரிப்பதற்காக ஓடும் பலரும் உறக்கம் என்பது நம் உடலை செயலற்ற நிலைக்குத் தள்ளும் தேவையற்ற ஒன்று என்பதாகவே நினைத்துக் கொள்கின்றனர்.அவ்வாறே அவர்கள் உறக்கம் என்பது மனிதனுக்கு அவசியமான செயல்தான் என்பதை கூட ஏற்க தயாராகவும் இல்லை.ஏனோ மனிதன் அவ்வப்பொழுது அதனை கட்டாயத்தின் அடிப்படையில் வேறு வழியின்றி ஒவ்வொரு நாளும் சடங்காக செய்வதற்கு ஆட்படுத்தப்பட்டு விட்டான் என்பதாகவே எண்ணிக்கொள்கின்றனர்.ஆனால் உண்மையென்ன வெனில் மனிதனின் செயல்பாட்டிலேயே மிக உன்னதமான செயல் உறக்கம் தான் என்பதாகவே நான் கருதுகின்றேன்.

ஆம் ..!மனிதன் எந்தளவிற்கு தன் உடலாலும் அசைவுகளாலும் செயல்புரிகின்றானோ அதே அளவிற்கு தன் உடலையும் அசைவுகளையும் செயலற்ற செயலில் வைப்பது மிக அவசியமாகும்.அது மனிதன் செய்யும் ஏதோ ஒரு சடங்கோ அல்லது சம்பரதாயமோ அல்ல,மாறாக அதுதான் ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் மீட்சி ஆகும்.இதனைத்தான் ஆன்மீக குருக்கள் உறக்கம் என்பது சிறிய இறப்பு என்பதாக குறிப்பிடுகின்றனர்.
அதாவது மனிதன் உறக்கத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் இறந்து எழுகின்றான் என்பதாக கூறுகின்றனர்.இதனை அறிவியல் ஆய்வாளர்களும் உண்மைபடுத்தவே செய்கின்றனர்.அதாவது ஒரு மனிதன் தூங்கி எழுந்த பிறகு அவனுடைய உடலாலும் சிந்தனையாலும் கடந்த காலத்தை கடந்துவிடுகின்றான் என்பதாகவும் அதனால் அவன் பெரும்பாலும் புதியதொரு மனிதனாகவே இவ்வுலகில் தோன்றுகின்றான் என்பதாகவுமே உலவியல் நிபுனர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஆக உறக்கம் என்பது நம் வாழ்வின் மிகப்பெரும் தாக்கத்தை உண்டு செய்யும் ஒரு அற்புத இயக்கம் அல்லது உண்ணத செயல் என்பதுதானே தவிர அது நம் வாழ்வியலை செயலற்றதாக்கும் ஏதோ ஒரு வெற்று சடங்கல்ல என்பதை நம்மில் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும் எனபதையே இங்கு நான் முதற்கண் வேண்டிக்கொள்கின்றேன்.அடுத்தபடியாக மனிதன் உறங்குவதால் எத்தகைய ஆரோக்கிய நிலைகளையெல்லாம் பெற்றுக்கொள்கின்றான் என்பது சம்மந்தமாக ஒரு சில முக்கிய பலன்களை பார்ப்போம் வாருங்கள்..!

உறக்கத்தின் பலன்கள்.

1.மூலைக்கு நியாபக சக்தியையும்,புத்துணர்ச்சியையும் ஊட்டுகின்றது.

பொதுவாகவே மனிதனின் மூலை பெரும்பாலும் அதிகம் செயல்பட்டுக் கொண்டே இருப்பதாகும்.ஆனால் மனிதன் எப்பொழுது தூங்குவானோ அப்பொழுது மூலை அதனுடைய வெளிசெயல்களை நிறுத்திவிட்டு முன்பு எதையெல்லாம் பதிவிட்டதோ அவற்றையெல்லாம் மீண்டும் மீட்டிப்பார்த்து அவற்றில் எது மிக அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதனை மட்டும் 
உள்பதிவேட்டில் பதிவு செய்து கொண்டு மீதியை வெளியே தூக்கி எறிந்துவிடுகின்றது.இதன் மூலம் ஒரு மனிதன் 50 ஆண்டுகளுக்கு முன்பு உணர்ந்த ஒன்றையும் ஒரு நொடியில் அடையாளம் கண்டுவிடலாம் என்பதாக அறிவியல் அறிஞர்கள் குறிப்பிட்டுக்காட்டுகின்றனர்.மேலும் இத்தகைய மகத்தான திறனை தூக்கம்தான் ஏற்படுத்துகின்றது என்பதையும் மிகத்துள்ளியமாக குறிப்பிட்டுக்காட்டுகின்றனர்.

2.இதயத்தை சீராக துடிக்கச் செய்கின்றது.

மனிதன் வெளியில் செயல்படும் சமயம் பல்வேறு விதங்களில் துடிக்கும் இதயம் தூங்கும் சமயம் அவற்றின் தாக்கங்களை விட்டும் தன்னை தற்காத்துக்கொண்டு அவை தன்னுடைய இயல்பு நிலைக்கு வருகின்றது. இதனால் பெரும்பாலும் நம் இரத்த ஓட்டம் சீராகி இதய நோய்களிலிருந்தும் நாம் பாதுகாக்கப்படுகின்றோம் என்பதாக மருத்துவர்களில் பலரும் விவரிக்கின்றனர்.அவ்வாறே இதயம் தன்னிடம் வரும் இரத்தத்தை உடனே சுத்திகரித்துதான் அனுப்புகின்றது என்றாலும் குறிப்பாக உறக்கத்தின் போதே இரத்தத்தை சுத்திகரிக்கும் வேலையை இதயத்தால் மிக சீராக செய்ய முடிகின்றது என்பதாகவும் கூறுகின்றனர்.

3.கவணிக்கும் திறனை அதிகப்படுத்துகின்றது.

உறக்கத்தின் மூலம் பழைய காட்சிகள் மற்றும் சம்பவங்கள் அனைத்தும் அடிமனதிற்கு சென்றுவிடுவதால் ஒருவர் நன்றாக தூங்கி எழுந்து விடுவாரேயானால் அவருடைய கவனிக்கும் திறனும் சிந்திக்கும் ஆற்றலும் மிக புத்துணர்வோடு செயல்படுகின்றது என்பதாகவே உலவியல் நிபுனர்கள் குறிப்பிடுகின்றனர்.எனவே மாணவர்களுக்கும் உறங்கி எழுந்த பிறகுள்ள நேரத்தையே படிப்பதற்காக பரிந்துரைக்கவும் செய்கின்றனர்.ஏனெனில் வாசிப்பு அல்லது கற்றல் என்பது கவனத்தை அடிப்படையாகக்கொண்டது என்பதால் பெரும்பாலும் தூங்கி எழும் ஒரு நபரால் அதனை முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும் என்பதாக அவர்கள் விவரிக்கின்றனர்.

4.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகின்றது.

ஒருவர் நன்றாக உறங்குவதால் அவருடைய உடலில் அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தியை உறுவாக்கும் செல்கள் இடம்பெறுகின்றது என்பதாக பல்வேறு மருத்துவர்களும் குறிப்பிடுகின்றனர்.இதனால் தான் நோய்வாய் பெற்றவர்களுக்கு அவ்வப்பொழுது தூக்கத்தையும் மருந்தாக பரிந்துரைக்கப்படுகின்றது என்பதாகவும் விளக்கமளிக்கின்றனர்.

5.உடலை புத்துணர்வூட்டுகின்றது.

மனிதன் விழித்திருக்கும் நிலையில் உடலால் அதிகம் செயல்படுவதால் இயற்கையாகவே ஒரு குறிப்பிட்ட சமயத்தில் சோர்வை சந்தித்தித்து விடுகின்றான்.அச்சமயங்களில் மனிதன் உறங்குவதை தவிர அதற்கான சிறந்த நிவாரணி எதுவொன்றையும் பெற்றுக்கொள்ள முடியாது என்பதாகவே மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.எனவே மனிதன் தன் உடல் சோர்வை நீக்கவும்,தன்னை மீண்டும் மீண்டும் மீட்டி புத்துணர்வுமிக்கவனாக ஆக்கிக்கொள்ளவும் உறக்கம் மட்டுமே இறைவன் மனிதனுக்கு கொடுத்த மிகப்பெரும் வரமாக இருக்கின்றது என்றால் நிச்சயம் அது மிகையாகாது.

ஆக உறங்குவதின் பலன்கள் மேற்கூறப்பட்டவை தவிர்த்து இன்னும் ஏறாலமாக இருக்கின்றது என்றாலும் அவை அனைத்தையும் இங்கு நான்  சுட்டிக்காட்டுவதின் மூலம் உங்களுடைய வாசிப்பை சலிப்படைய செய்துவிடுவேனோ என்று அஞ்சுகின்றேன்.எனவே உறக்கம் என்பது ஏதோ நாம் நம்முடைய கலைப்பை ஆற்றிக்கொள்ளும் ஒரு சிறிய சடங்கு மட்டுமே என்று எண்ணி உறங்குவதை நிறுத்துவிட்டு அதனால் நம் வாழ்வின் பல்வேறு பகுதிகள் செழிப்பாகின்றது என்பதை ஆழமாக உணர்ந்து கொள்ளுங்கள் என்பதை மட்டும் இங்கு நான் பணிவன்போடு கேட்டுக்கொண்டு அடுத்தபடியாக உறங்காமல் போவதால் எப்படிப்பட்ட பாதிப்புகளை யெல்லாம் நாம் சந்திப்போம் என்பது குறித்து சில விளக்கங்களை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்..!

உறங்காமல் போவதன் பாதிப்புகள் என்ன.?

1.இதய நோய் ஏற்படுத்துகின்றது.

பெரும்பான்மையான இதய நோய்கள் சீறான உறக்கமின்மையால் மட்டுமே ஏற்படுகின்றது என்பதாக மருத்துவர்கள் மிக உறுதியாக குறிப்பிடுகின்றனர்.அதிலும் குறிப்பாக யார் சரிவர உறங்குவதில்லையோ அவர்கள் கட்டாயம் இரத்த அழுத்த நோயிற்கோ அல்லது சர்க்கரை நோயிற்கோ ஆலாகின்றார்கள் என்பதாகவும் கூறுகின்றனர்.

2.உடல் பருமனை அதிகரிக்க அல்லது மெலியச் செய்கின்றது.

சீறான உறக்கமின்மை என்பது நம்முடைய உடற்பருமனை மிக வேகமாக அதிகரிக்கச் செய்துவிடும் என்றும், சிலருக்கு அது உடலை மிக மோசமாக மெலியச் செய்துவிடும் என்றும் பல்வேறு மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர்.

3.தோள் நோய்களை ஏற்படுத்தும்.

சீறான உறக்கமின்மை என்பது உடலில் தோள் சார்ந்த நோய்கள் ஏற்படுவதற்கு மிக நெருக்கமான காரணியாக இருக்கின்றது என்பதாக பல்வேறு மருத்துவர்களும் எச்சரிக்கின்றனர்.

4.மூலையில் மந்தத்தன்மையை ஏற்படுத்துகின்றது.

சீறான உறக்கமின்மையால் மூலையின் செயற்பாடுகள் முழுவதுமாக வழுவிழந்து மந்தமாக செயலபடத்தொடங்கிவிடுகின்றது.இதனால் மனிதனுடைய சிந்திக்கும் திறன் மற்றும் அவனுடைய கவனிக்கும் ஆற்றல் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு பல சமயங்களில் புத்தி பேதலிப்பதற்கு இதுவே காரணமாக அமைந்துவிடுகின்றது என்பதாகவே மருத்துவர்களில் பலரும் எச்சரிக்கின்றனர்.ஆக இது போன்று உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் பல்வேறு பிரச்சனைகளை சரியான உறக்கமின்மையால் ஒருவர் அடைவதற்கு அதிகம் சாத்தியம் இருக்கின்றது.இவை ஒருபுறமிருக்க ஒருவர் மொத்தமாகவே உறங்குவதில்லை என்றால் என்ன நடக்கும் என்பதையும் ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.அதாவது சராசரியாக ஒரு மனிதன் 3 அல்லது 4 நாட்களிலிருந்து 11 நாட்கள் வரை உறக்கமே இன்றி வாழ முடியும் என்றும் அதையும் ஒரு மனிதன் தாண்டிவிட்டால் அதிகபட்சம் அவன் இறந்துவிடுவான் அல்லது முற்றிலுமாக அவனுடைய உடல் செயல் இழந்துவிடும் என்பதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

எனவே முற்றிலுமாக உறக்கமின்மை என்பதை ஒருகாலமும் உங்கள் வாழ்வில் நினைத்துப்பார்த்துவிடாதீர்கள்.குறிப்பாக இரவு பணியாற்றுபவர்களுக்கு இந்த பிரச்சணை இருப்பதாகவே நான் காண்கின்றேன்.அதாவது இரவில் பணியாற்றிவிட்டு பகலிலும் உறக்கமின்றி இருந்துவிடுகின்றனர்.இது உங்கள் உடலை மிகப்பெரும் ஆபத்தில் நீங்களே தள்ளிவிடும் மாபாதக செயல் என்பதை நன்றாக நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள் என்பதை அன்போடு வேண்டுகின்றேன்.சரி இதுவரை உறங்காமல் போவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்து சில விளக்கங்களை பார்த்தோம் இப்பொழுது அதிகம் உறங்குவதால் எத்தகைய பாதிப்புகள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் என்பது குறித்தும் சில விளக்கங்களை பார்த்துவிடுவோம்.

அதிகம் உறங்கலாமா..?

அதிகம் உறங்கலாமா? என்பது குறித்து நாம் பார்ப்பதற்கு முன்பு அதிகம் உறங்குவது என்றால் என்ன என்பது குறித்து அறிந்து கொள்வது மிக அவசியமாகும்.அவ்வாறே அதிகம் உறங்குவதை நாம் அறிந்து கொள்ள ஒரு மனிதன் சராசரியாக எவ்வளவு மணி நேரம் உறங்கினால் அவனுடைய உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என்பது குறித்து அறிந்துகொள்வதே மிகச் சரியானதாக இருக்கும்.எனவே வாருங்கள் முதலில் ஒரு மனிதன் சராசரியாக எவ்வளவு மணி நேரங்கள் தூங்கவேண்டும் என்பது குறித்து அறிந்து கொள்வோம்.

ஒரு மனிதனின் சராசரி உறக்க நேரம் என்ன?

3 லிருந்து 5 வயதுடையோர்                    =   10 லிருந்து 13 மணி நேரம்.

6 லிருந்து 12 வயதுடையோர்                  =   9 லிருந்து 12 மணி நேரம்.

13 லிருந்து 18 வயதுடையோர்                =   8 லிருந்து 10 மணி நேரம்.

19 லிருந்து 60 வயதுடையோர்                =   7 லிருந்து 8 மணி நேரம்.

இவற்றில் எந்த வயதுடையவரானாலும் சரி நோய்வாய்பட்டிருந்தால் அப்பொழுது அவர் மருத்துவத்தின் அடிப்படையில் 14 லிருந்து 18 மணி நேரம் வரை தூங்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.அவ்வாறே பிறந்த குழந்தைகளும் 16 லிருந்து 18 மணி நேரம் தூங்குவதே ஆரோக்கியம் என்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.ஆக யார் எவ்வளவு நேரம் சராசரியாக உறங்க வேண்டும் என்பதை ஓரளவு விளங்கியிருப்பீர்கள் என்றே கருதுகின்றேன்.எனவே அடுத்தபடியாக வாருங்கள் அதிகம் உறங்குவது என்றால் என்ன ?அவ்வாறு உறங்கலாமா என்பது சம்மந்தமாக சில விளக்கங்களை பார்த்துவிடுவோம்.

அதிகம் உறங்கலாமா?

மேற்கூறப்பட்டவர்களில் மேற்கூறப்பட்ட நேரத்தை தாண்டி உறங்குவது கட்டாயம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பதாகவே மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.அதிலும் குறிப்பாக 19 லிருந்து 60 வயதுடையோர்கள் 14 மணி நேரத்திற்கு மேல் தூங்கினால் கட்டாயம் அவர்களுக்கு ஹைபர் சோமேனியா என்ற நோய் ஏற்படும் என்பதாக எச்சரிக்கின்றனர்.அதனால் அவர்கள் எப்பொழுதும் தூக்க கலக்கித்திலேயே காணப்படுவார்கள் என்பதாகவும் குறிப்பிடுகின்றனர்.அது ஒரு மனிதனை உறிஞ்சக்கூடிய மிகக்கொடிய நோய் என்பதாகவும் எச்சரிக்கின்றனர்.எனவே அதிகம் உறங்குவது என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரும் ஆபத்து என்பதாகவே பெரும்பாலான மருத்துவர்கள் விவரிக்கின்றனர் என்பதை எல்லா சமயங்களிலும் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

அடுத்தபடியாக சிலர் குறிப்பிட்ட நேரத்தில் துங்குவதற்கு நாங்கள் முயற்சிக்கவே செய்கின்றோம் ஆனால் உறக்கம் நீங்கள் குறிப்பிட்ட சராசரி மணி நேரம் வருவதில்லையே என்று கேட்கின்றனர்.எனவே சராசரியான உறக்கத்திற்கான சில வழிமுறைகளையும் கீழே நான் பதிவு செய்கின்றேன். முடிந்தால் அவற்றையும் கடைபிடித்துப்பாருங்கள்.நிச்சயம் பலன் கிடைக்கும் என்றே நம்புகின்றேன்.

சராசரி உறக்கத்திற்கான வழிமுறைகள்.!

  1. தினமும் உறங்க செலவதற்கான குறிப்பிட்ட நேரத்தை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
  2. உறங்கும் அறையை உறங்குவதுற்கு உகந்ததாக மிதமான குளிராக்கிக்கொள்ளுங்கள்.
  3. இன்னும் உறங்கும் அறையை பெரும்பாலும் மிதமான இருளாக்கிக் கொள்ளுங்கள்.
  4. உறக்கத்தை கெடுக்கும்படியான எப்பொருளையும் அறையில் வைத்துக் கொள்ளாதீர்கள்.
  5. மெல்லிய ஆடைகளை உறக்கத்திற்காக பெரும்பாலும் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
  6. மிருதுவான படுக்கையை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.
  7. உறங்க செல்வதற்கு முன்பு சற்று அமைதியாக பிரார்த்தணையின் மூலமோ அல்லது புத்தகம் வாசிப்பின் மூலமோ உடலை சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளுங்கள்.
  8. காலை சூரிய ஒளி உங்கள் மிது படும்படியான இடத்தில் முடிந்தளவு உறங்குங்கள்.
மேற்கூறியவாறு நீங்கள் உறங்க முயற்சியுங்கள் கட்டாயம் உங்களால் சராசரி உறக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்றே நான் நம்புகின்றேன்.

வியாழன், 14 ஏப்ரல், 2022

உறவின் ரகசியங்கள்!


முன்னுரை:

"உறவின் ரகசியங்கள்"என்ற இந்த சிறிய புத்தகத்தை இந்த உலகில் கலப்பற்று உறவாட நினைக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்காகவும் தொகுத்துவருகின்றேன்.அந்த புத்தகத்தில் உறவுகள் என்றால் என்ன .?என்பதையும் அது எங்கிருந்தெல்லாம் தோன்றுகின்றது என்பதையும் என் சிந்தைக்கு உட்பட்டு மிக விரிவாக விளக்கி இருக்கின்றேன்.அவ்வாறே மக்கள் எதையெல்லாம் உறவாடுவதற்கான அளவுகோலாக எடுத்துக்கொள் கின்றார்கள் என்பது குறித்தும் அவற்றின் உண்மை நிலை என்ன என்பது குறித்தும் மேலும் எத்தகைய உறவுகளெல்லாம் தோற்றுப்போகின்றது என்பது குறித்தும் மிக விரிவாகவே விவரித்து இருக்கின்றேன்.நிச்சயமாக அந்த சிறிய புத்தகம் இந்த மனித சமூகத்துடன் உறவை மேம்படுத்த விரும்பும் அனைவருக்கும் மிக பயனலிக்கக்கூடியதாக அமையும் என்றே ஆதரவு வைக்கின்றேன்.இப்பொழுது அப்புத்தகத்தின் ஒரு சில பகுதியயி மட்டும் இந்த கட்டுரையில் தருகின்றேன்.தொடர்ந்து வாசித்து வாருங்கள்..

நாம் உறவின் பல்வேறு ரகசியங்களை அறிவதற்கு முதலில் உறவு என்றால் என்ன என்பதை நன்றாக அறிந்து வைத்திருக்க வேண்டும் என்பதால் இங்கு உறவு என்றால் என்ன என்பதற்கு மொழி ரீதியான மேலும் அகராதி ரீதியான பொருள் என்ன என்பதை விளக்குவதே மிகப்பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகின்றேன்.எனவே முதலில் உறவு என்றால் என்ன என்பது சம்மந்தமாக மொழியின் அடிப்படையிலும் அகராதியின் அடிப்படையிலும் சிறியதோர் அறிமுகத்தை இங்கு பதிவிட்டுவிடுகின்றேன்.

உறவு என்றால் என்ன..?

உறவு என்ற சொல்லிற்கு பெரும்பாலும் அகராதியில் :

"இரு மனிதர்களுக்கு மத்தியில் ஏற்படும் தொடர்பு என்றும் இரு மனிதர்களுக்கு மத்தியில் ஏற்படும் இசைவு அல்லது பிணைப்பு" என்றுமே பொருள் கொள்ளப்படுகின்றது.இவற்றை தவிர்த்து இரு நபர்கள் திருமண ஒப்பந்தத்தின் அடிப்படையில் அல்லது அன்பின் அடிப்படையில் உடலால் இணைவதற்கும் மேலும் இரு நபர்கள் இரத்தபந்தத்தால் இணைவதற்கும் உறவு என்றே பொருள் கொள்ளப்படும் என்பதாகவும் அகராதியில் நம்மால் காணமுடிகின்றது.இவை உறவு என்பதற்கு மொழி மற்றும் அகராதி ரீதியிலான விளக்கமாகும். இவையன்றி உறவு என்பதற்கு சமூகம் எத்தகைய பொருள் கொள்கின்றது என்பது சம்மந்தமாகவும் நாம் அறிந்து கொள்வது என்பது உறவின் பல்வேறு ரகசியங்களை ஆழமாக நாம் அறிந்து கொள்வதற்கு மிக உதவியாக இருக்கும் என்பதால் அதனையும் சற்று வட்டுறுக்கமாக இங்கு விவரித்துவிடுகின்றேன்.

உறவு சம்மந்தமான சமூக புரிதல் என்ன..?

மக்களில் பலரும் உறவு என்பது வெறும் திருமண ஒப்பந்தத்தாலும் அல்லது இரத்த பந்தத்தாலும்  ஏற்படுவது மட்டுமே என்று தங்களுக்கு தாங்களே நினைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் தங்களை தாங்களே போட்டுக்கொள்வதையே இன்றைய நிதர்சன வாழ்வில் நாம் பெரும்பாலும் காண முடிகின்றது.பெரும்பான்மையான மக்களின் இந்த புரிதலே பெரும்பாலும் மனிதர்களோடு பொதுவாக பேசுவதையோ அல்லது பழகுவதையோ தவிர்த்துக் கொள்வதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்துவிடுகின்றது என்றே நான் கருதுகின்றேன்.

இத்தைகைய புரிதல்தான் பெரும்பான்மையான மனிதர்களை தூரப்படுத்துவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றது என்றும் நான் நம்புகின்றேன்.ஏனெனில் இத்தகைய புரிதல் உடையவர்கள் வெளிப்படையாகவே தன் ரத்தபந்தமல்லாத அல்லது திருமணபந்தமல்லாத பிறமனிதர்களை வெறுத்து ஒதுக்குவதற்கே முற்படுகின்றனர்.மேலும் அவ்வாறு செயல்படுவதையே அவர்களுக்கான பாதுகாப்பாகவும் அவர்கள் எண்ணிக்கொள்கின்றனர் என்பதும் இங்கு கவனிக்கத்தக்க விஷயமாக இருக்கின்றது என்பதையும் நான் பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கின்றேன்.

உண்மையில் இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம் சார்ந்ததுதான் என்றாலும் இங்கு தான் உறவின் சில வகைகளை அவர்கள் உணரத்தவறுகின்றனர் என்பதாகவும் கருதுகின்றேன்.மேலும் மேம்போக்கான அவர்களின் தவறான புரிந்துணர்வால் பெரும்பான்மையான மக்களிடம் தெரிந்தோ தெரியாமலோ வெறுப்பை மட்டுமே வேறூன்றச் செய்துவிடுகின்றனர் என்பதையும் இங்கு உலவியல் உண்மையாக நான் வறுத்தத்தோடு பதிவு செய்கின்றேன்.அதாவது உறவு என்பது தொடர்பினாலும் சந்திப்பினாலும் மேலும் அவற்றில் ஏற்படும் ஆழமான புரிதலாலும்தான் உறுவாகின்றது என்ற உண்மையை மறந்து இரத்த உறவுகள்தான் தொடர்பையும் ,சந்திப்பையும் ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் தங்களுக்கு தாங்களே தவறான புரிதலை கேடயமாக்கிக் கொண்டது என்பது மிக வருத்தத்திற்குறிய விஷயமாகும் என்றே நான் கருதுகின்றேன்.

அவ்வாறே அவர்கள் உறவு என்றாலே அது தன்னை முழுவதுமாக ஒப்படைக்க கூறும் திருமண உறவு மட்டும்தான் என்றும் அல்லது தங்களுடைய தனிப்பட்ட வாழ்வில் இடமளிக்கும் அளவிற்கான ஆழமான உறவு என்பது மட்டும்தான் என்றும் தங்களுக்கு தாங்களே ஒரு தவறான புரிதலை ஏற்படுத்திக் கொண்டது என்பதும் மிக வருந்தத்தக்க செயலாகவே நான் கருதுகின்றேன்.இந்த தவறான புரிந்துணர்வே பெரும்பாலும் ஏனைய மனிதர்களை அவர்கள் வெளிப்படையாகவே புறக்கணிப்பதற்கான முக்கிய காரணியாகவும், உலவியல் உண்மையாகவும் அமைந்திருக்கின்றது என்பதை என்னால் அருதியிட்டுக் கூற முடியும்.எனவே இத்தகைய மனித விரோத புரிதலையே முதலில் கலைய வேண்டிய அவசியமிருக்கின்றது என்ற அடிப்படையில்  இங்கு மக்கள் பெரிதும் கவனத்தில் கொள்ளாத சில உறவுகளின் வகைகளை விளக்க வேண்டிய அவசியமிருக்கின்றது என்றே நான் உணர்கின்றேன்.அவற்றை இங்கு பதிவு செய்வது மனிதத்தோடு உறவாட விரும்பும் அனைவருக்கும் மிக பிரயோஜனம் மிக்கதாக இருக்கும் என்றும் கருதுகின்றேன்.எனவே வாருங்கள் மக்கள் தங்கள் வாழ்வில் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய உறவின் சில வகைகளை முதலில் அறிந்து கொள்வோம்...!

உறவின் வகைகள்..!

1.பொதுவான உறவு.

2.தனிப்பட்ட உறவு.

3.ஆழமான உறவு.

இந்த மூன்று வகையான அனுகுமுறையையும் இன்றைக்கு நம்மில் ஒவ்வொருவரும் நம்மை அறியாமலே கடைபிடித்து வருவது என்பது உண்மையில் ஆச்சர்யப்படத்தக்கதாகும்.ஆம் நம்மில் ஒவ்வொருவரும் இந்த மூன்று வகையான அனுகுமுறையையும் உறவில் கடைபிடித்துக்கொண்டே இருக்கின்றோம்.ஆனால் அதனை எப்படி கடைபிடிப்பது யாரிடம் கடைபிடிப்பது என்பதில் தான் பெரும்பாலோர் தவறிழைத்துவிடுகின்றனர். அந்த அனுகுமுறைகளை நாம் மிக இலகுவாக புரிந்து கொள்வதற்கு நம் வாழ்வில் நாம் அன்றாடம் கடைபிடித்து வரும் பேச்சை உதாரணமாக சுட்டிக்காட்டுவது இங்கு மிகப்பொறுத்தமானதாக இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.எனவே அவ்வுதாரணத்தின் மூலமே விளக்குவதற்கு முயற்சிக்கின்றேன்.

பொதுவாகவே நம்முடைய பேச்சில் மூன்று வகையான அனுகுமுறைகள் பொதிந்து இருக்கின்றது.அவற்றில் 1.பொதுவான பேச்சு என்ற ஒன்றும்,2.தனிப்பட்ட பேச்சு என்ற ஒன்றும்,3.ஆழமான(இரகசிய) பேச்சு என்ற ஒன்றும் எப்பொழுதும் இருக்கவே செய்கின்றது.இது நாம் எல்லோரும் நமக்கு தெரியாமலே நம்முடைய பேச்சில் கடைபிடித்து வரும் ஒரு சாதாரண செயல்தான் என்றாலும் இதனை பலரும் தெரிந்து கடைபிடிப்பது கிடையாது. அவ்வாறே இதனை எப்படி கடைபிடிப்பது என்பதிலும், யாரிடம் கடைபிடிப்பது என்பதிலும் பெரும்பாலானோர்  தவறிழைத்துவிடுகின்றனர் என்பது எனது கண்ணோட்டமாகும்.

அது எப்படி மக்கள் இது விஷயத்தில் தவறிழைக்கின்றார்கள் என்று நீங்கள் கூறுகின்றீர்கள் என்று என்னைப்பார்த்து நீங்கள் கேட்கலாம். அவசரப்படாதீர்கள்..!அதற்கான விளக்கத்தை இங்கு நான் முழுவதுமாக குறிப்பிடுகின்றேன்.

அன்றாட பேச்சும் உறவின் அனுகுமுறையும்..!

நான் மேலே கூறிய மூன்று வகையான பேச்சுக்களையும் உங்கள் மனதில் நன்றாக நினைவில் நிறுத்திக்கொண்டு உங்கள் பொதுவாழ்வில் நீங்கள் எப்படி பேசுகின்றீர்கள் என்பதை சற்று ஆழமாக உற்று நோக்கிப்பாருங்கள். ஒன்று நீங்கள் எல்லோரோடும் ஒரேவிதமாக பேசுபவராக இல்லாமல் இருக்கலாம்.அல்லது எல்லோரிடமும் ஒரே விதமாக பேசுபவராக இருக்கலாம். ஒருவேலை இந்த இருவகையினரில் நீங்கள் எல்லோரிடமும் ஒரே விதமாக பேசும் இரண்டாவது வகையினராக இருந்தால் நீங்கள்தான் நான் மேலே கூறிய அந்த தவறிழைக்கும் நபர்கள் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.மேலும் நீங்கள் சந்திக்கும் மக்கள் ஒரே மாதிரியானவர்கள் இல்லை என்பதையும் மேலும் நீங்கள் புரிந்து கொள்ளாதவர்களாகவே இருக்கின்றீர்கள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.

அடுத்த பதிவில் தொடர்வோம்:

புதன், 6 அக்டோபர், 2021

யார் நல்லவர் ?யார் கெட்டவர்?(Who is good and who is bad)


யூதர்களின் ஒரு சுவாரஸ்யமான கதை..!

ஒரு கோபக்கார கடவுள் ஒரு நகரத்தில் அங்குள்ள மக்களெல்லாம் மிக மோசமானவர்களாக இருக்கின்றனர் என்பதற்காக அந்த நகரத்தையே அழிக்கப்போவதாக முடிவெடுத்தார்.அப்படி அழிப்பதற்கு முன்பு அங்கு வசித்துவந்த தனக்குப்பிடித்தமான ஒரு துறவியை அழைத்து இந்த நகரத்தை நான் அழிக்கப்போகின்றேன் எனவே நீங்கள் அங்கிருந்து சென்றுவிடுங்கள் என்று கூறினார்.

இதனை கேள்விபட்ட துறவி சற்று யோசித்துவிட்டு கடவுளே நீங்கள் அழிக்கவிருக்கும் அந்த நகரத்தில் ஆயிரம் தீயவர்கள் இருக்கின்றார்கள் என்பது உண்மை என்றாலும் நூறு நல்லவர்களும் இருக்கின்றனரே அதனை என்ன செய்ய இருக்கின்றீர்கள் என்றார்...!உடனே கடவுளும் ஆமாம் இதனைப் பற்றி நான் யோசிக்கவே இல்லையே நல்லவேலை கூறினாய்..! சரி அங்கு யார் அந்த நூறு நபர்கள என்பதை எனக்கு காட்டு நான் அவர்களுக்காக அவ்வூரை விட்டுவிடுகின்றேன் என்றார்.அதற்கு துறவி கடவுளே சற்று பொறுங்கள்..

அங்கு நூறு நல்ல நபர்கள் இருப்பார்களா என்பது எனக்கு தெறியாது ஆனால் அங்கு பத்து நபர்கள் நல்லவர்களாக இருந்தால் அவ்வூரை என்ன செய்வீர்கள் என்றார்.கடவுளோ அங்கு நூரோ பத்தோ எண்ணிக்கை முக்கியமல்ல அங்கு நல்லவர்கள் இருக்கின்றார்கள் என்பதை எனக்கு நிறூபி நான் அந்த ஊரை விட்டுவிடுகின்றேன் என்றார்.

உடனே துறவி கடவுளே என்னால் என்னை தவிர வேறு யாருக்கும் பொறுப்பேற்க முடியாது.நான் என்று நல்லவனாக ஆனேனோ அன்றிலிருந்து யாரையும் நல்லவன் கெட்டவன் என்று பிறித்துப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். என்னைப் பொறுத்த வரை எல்லோரும் நல்லவர்களே.நான் யாரிடமும் கெட்ட தனத்தை பார்ப்பதில்லை.ஏனெனில் கெட்ட தன்மை என்பது ஒரு நிழல் போன்றது.அது ஒரு மனிதனின் உண்மை தன்மை ஆகாது என்பதே எனது எண்ணம்.

கெடுதல் உண்டாக்கும் செயலை ஒருவன் செய்திருக்கலாம் ஆனால் அது அவனுடைய இருப்பையே கெட்டதாக்கிவிட முடியாது என்றே நான் கருதுகின்றேன்.ஒருவன் ஒரு கெட்ட செயல் அல்லது இரு கெட்ட செயல் அல்லது நூறு கெட்ட செயல்கள் கூட செய்திருக்கலாம் ஆனால் அது அவனது இருப்பை ஒருபோதும் கெடுப்பது இல்லை.அவனுடைய இருப்பு எப்பொழுதும் தூய்மையாகவே உள்ளது .ஏனெனில் இருப்பு என்பது ஒருவனை அச்செயலை விட்டும் எப்பொழுது வேண்டுமானாலும் வெளியேற்றிவிடும்.அது அவனது கடந்த காலத்தையும் கூட கடக்கச்செய்துவிடும்.எனவே நிரந்தரமற்ற அவனது செயலை வைத்து அவனது இருப்பை எவ்வாறு தீயவன் என்றோ அல்லது நல்லவன் என்றோ முடிவு செய்ய முடியும்..?

எனவே கடவுளே நான் அந்த நகரத்தில் தான் வசிக்கின்றேன் பலரும் அங்கு நல்லவர்கள்தான் என்று என்னால் உறுதியாக கூற முடியாது என்றாலும் அவர்கள் நற்செயல்களும் செய்யவே செய்கின்றனர் என்றார்.அதனை கேட்ட கடவுள்.அந்த நகரத்தை அழிக்க வேண்டும் என்ற முடிவை மாற்றிக் கொண்டார் என்பதாக அக்கதை முடிகின்றது.

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

உங்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்..?(Monk story with a king)

ஒரு நாட்டின் அரசன் மிக பயபக்தியானவர்.அவர் எப்பொழுதும் இரவு நேரத்தில் மாறுவேடத்தில் மக்களின் நிலையை அறிவதற்காக நகர்வளம் செல்வதுண்டு.அப்படி அவர் செல்கையில் தினமும் ஒரு வாலிபன் ஒரு மரத்தடியில் அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துகொண்டு செல்வார்.ஒரு நாள் ஆர்வமிகுதியால் தன் குதிரையை விட்டும் இறங்கி அவ்வாலிபனிடம் சென்றார்.

"வாலிபனே நான் உன் தியானத்தை கலைத்தற்காக மன்னித்து விடு என்றார்.வாலிபனோ தன் கண்களை மெல்லமாக திறந்து "இல்லை நான் தியானம் செய்வதில்லை அது எப்பொழுதும் என்னுடன் தான் இருக்கின்றது , அது எப்பொழுதும் என்னைவிட்டும் கலைவதில்லை எனவே நீங்கள் மன்னிப்பு வேண்டவேண்டிய எந்த அவசியமுமில்லை ஏன் அழைத்தீர்கள் என்று சொல்லுங்கள் என்றார்.அரசன் " நான்தான் இந்நாட்டின் அரசன்.என்னுடைய அரன்மனைக்கு நீங்கள் வந்துவிடுங்கள்.அங்கு நான் உங்களை நன்றாக பார்த்துக்கொள்கின்றேன்.நீங்கள் இந்த மரத்தடியில் அமர்ந்துகொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை.உங்களுடைய தவத்தாலும்,ஒளியாலும், அமைதியினாலும் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுவிட்டேன்.எனவே தயவு கூர்ந்து என்னுடன் வந்துவிடுங்கள் என்றார்.

(உண்மையில் அந்த துறவி தன் அழைப்பை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றே அரசர் விரும்பினார்.ஏனென்றால் துறவி அதனை ஏற்றுவிட்டால் அவர் அரன்மனையையும் ஆடம்பரத்தையும் விரும்பிதான் இருந்திருக்கின்றார் என்று ஆகிவிடும் என்று பயந்தார்.)ஆனால் அந்த வாலிபர் எழுந்து போகலாம் என்றார்.

அப்போது அரசருடைய மனம் முழுவதும் ஒரு வெள்ளப்பிரலயமே ஓங்கி வீசுகின்றது."இவர் அரன்மணையில் உள்ள சுகபோகங்களை அனுபவிப்பதற்கு விரும்புகின்றார்போல் தெரிகின்றதே,அப்படியானால் இவர் உண்மையான துறவி இல்லைபோல் தெரிகின்றது.ஏனென்றால் துறவிகள் என்பவர்கள் தங்களை வருத்தி கொள்பவர்கள்தான் என்று அவர் புரிந்து வைத்திருந்தார். ஆனால் இந்த வாலிபர் அரன்மணையை விரும்புகின்றாரே என்பதை கண்டு இவர் ஒரு போலி துறவி என்றே முடிவெடுத்துக் கொள்கின்றார்.

ஆனாலும் வார்த்தை மாறமுடியாதே என்பதற்காக வேறுவழியின்றி வாலிபரை அரன்மணைக்கு அழைத்து செல்கின்றார்.அங்குள்ள பிரத்யேக அறையை அவருக்காக தயார்செய்தும் கொடுத்தார்.மேலும் பணியாட்களையும் அழகிய அந்தபுறப் பெண்களையும் அனுப்பி வைத்தார்.வாலிபர் இவற்றில் எதனையும் மறுக்கவில்லை.அனைத்தையும் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டார்.அரசனின் எண்ணம் இன்னும் வலுப்பெற்றது.இந்த வாலிபன் என்னை ஏமாற்றிவிட்டான். நான் கடந்துசெல்லும் இடத்தை சரியாக கண்டுபிடித்து என்னிடம் அவன் தியானம் செய்வதுபோல் நடித்து ஏமாற்றிவிட்டான் என்று மனதுக்குள்ளேயே முடிவெடுத்துக் கொண்டார்.

இதே எண்ணத்தோடே அரசர் சில நாட்களை பல்லை கடித்துக்கொண்டு கடந்தார் என்றாலும் அவற்றை எல்லாம் போட்டு உடைப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்.அப்படி ஒரு நாளும் வந்தது.ஆம்..!
ஒரு நாள் துறவியும் அரசரும் ஒரு இடத்தில் அமர்ந்து தேநீர் அருந்தும் சூழல் ஏற்பட்டது.அப்பொழுது இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணி வாலிபரே உங்களிடம் நான் ஒரு சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள ஆசிக்கின்றேன் என்றார்.துறவியும் கேளுங்கள் என்றார்.

அரசர் சற்று தயக்கத்துடனே இதை நான் கேட்க விரும்பவில்லை என்றாலும் என் பாலாய்ப்போன மனம் அதனை உறுத்திக் கொண்டே இருக்கின்றது எனவேதான் நான் இதை கேட்கின்றேன் என்றார்.துறவி பரவாயில்லை கேளுங்கள் என்றார்...!அரசர்"உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன..?"தயவு செய்து எனக்கு விளக்கம் கூறுங்கள்.ஏனெனில் நான் அனுபவிக்கும் அனைத்தையும் நீங்களும் அனுபவிக்கின்றீர்கள் அப்படியானால் உங்களுக்கும் எனக்கும் உள்ள வித்தியாசம்தான் என்ன என்று சற்று விரப்புடனே கேட்டார்.

அதற்கு அந்த வாலிப துறவியோ இந்த சந்தேகம் "நான் உன் அரன்மணைக்கு வருவதாக ஒப்புக்கொண்டபோதே உன்னிடம் தோன்றிவிட்டது என்பதை நான் நன்றாக அறிவேன்.ஆனாலும் நீர் ஒரு கோழை.அன்றே இந்த கேள்வியை கேட்டிருந்தால் உன் மனம் நிம்மதியாக இருந்திருக்கும்.சரி இப்பொழுதாவது கேட்டாயே..! என்று கூறி விட்டு, இந்த கேள்விக்கு விடை இதோ இந்த ஆற்றை கடந்தால் மட்டுமே பெற முடியும் என்றார்.

அரசரோ அப்படியா அப்படியானால் நாம் அந்த பக்கமாக போகும்பொழுது அதனை பெற்றுக்கொள்வோம் என்றார்.ஆனால் துறவியோ அது இப்பொழுதே போனால் மட்டுமே கிடைக்கும்.எனவே என்னோடு ஆற்றைக் கடந்து வாருங்கள் என்றார்.இருவரும் ஆற்றைக் கடந்து ஒரு காட்டை வந்தைடைந்தனர்.அப்பொழுது துறவி இந்த காட்டிலேயே நான் அமர்ந்து தவம் செய்யப்போகின்றேன் எனவே நீங்கள் விரும்பினால் என்னோடு இருக்கலாம் இல்லையானால் நீங்கள் போகலாம் என்றார்.

அரசனோ நான் எப்படி உங்களோடு இருப்பது என்னை நம்பி ஒரு நாடு இருக்கின்றது.மேலும் எனக்கான பொறுப்புகளும் கடமைகளும் ஏறாலமாக அங்கு காத்திருக்கின்றது.எனவே என்னால் எப்படி உங்களோடு வர முடியும் என்றார்.அப்பொழுது துறவி "இது தான் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில் என்றார்.நான் ஒரு துறவி நேற்று போல் எனக்கு இன்று இல்லை.இன்று போல் எனக்கு நாளை இல்லை.எனவே நான் காட்டில் அமர்ந்திருந்தாலும் என் மனம் ஒரே மாதிரிதான் இருக்கும்.அரன்மணையில் அமர்ந்திருந்தாலும் என் மனம் ஒரே மாதிரிதான் இருக்கும்.ஆனால் உங்கள் நிலை அப்படிப்பட்டதில்லை. எனவே நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள் நான் இனி உங்கள் அரன்மனைக்கு வரப்போவதில்லை என்றார்.

அதற்கு அரசனோ இல்லை இல்லை நான் உங்களை தவறாக எண்ணிவிட்டேன் தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள்.நீங்கள் என் அரன்மணைக்கு கட்டாயம் என்னோடு வந்தேயாக வேண்டும் என்று துறவியின் காலில் விழுந்து மன்னிப்பு  வேண்டினார்.ஆனால் துறவியோ இல்லை நான் உங்களோடு இப்பொழுது வந்தாலும் உங்கள் மனம் என்றாவது ஒரு நாள் திரும்பவும் அதே கேள்வியை தோற்றுவிக்கும்.எனவே நான் உங்கள் மன அமைதியை கெடுக்க விரும்பவில்லை.எனவே நான் திரும்பி வருவதை நீங்கள் எதிர்பார்க்காதீர்கள் எனக்கு இந்த உலகில் ஒரு மரத்தின் நிழல் போதும் என்று உறுதியாக கூறிவிட்டார்.

நீதி:

  •  பிறரைப்பற்றிய நம் எண்ணங்கள் பல சமயங்களில் தவறாகவே அமைந்துவிடும்.
  • யாரையும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.
  • இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு நிலை உள்ளது.
  • இந்த உலகத்தில் ஒரு மரத்தின் நிழலே பெரும் மகிழ்ச்சிக்கு போதுமானது.