புதன், 4 ஆகஸ்ட், 2021

அரசியலும் பொருளாதார கொள்கைகளும்.(Capitalism, Socialism, Communism)


 

முன்னுரை:

ஒரு நாட்டில் ஒரு அரசு எத்தகைய பொருளாதார கொள்கையை கடைபிடிக்கின்றதோ அதனை பொருத்தே அந்நாட்டின் பொருளாதார வளர்சியும் அமைகின்றது என்பது நிதர்சனமாகும்.எனவே நாட்டின் பொருளாதார வளர்சியை கருத்தில்கொண்டு இன்றைய உலகில் மூன்று விதமான பொருளாதார கொள்கைகளே அனைத்து அரசுகளாலும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.அம்மூன்று பொருளாதார கொள்கைகளையும் அனைவரும் விளங்கிக்கொள்ளும் வண்ணமாக மிக எளிய உதாரணங்களால் என்னால் முடிந்தளவு விவரிக்க முயலுகின்றேன்.

பொருளாதாரக் கொள்கைகள்:

1.கம்யூனிச பொருளாதாரக் கொள்கை.

2.கேப்பிடலிச பொருளாதாரக் கொள்கை.

3.சோசியலிச பொருளாதாரக் கொள்கை.

1.கம்யூனிச பொருளாதார கொள்கை என்றால் என்ன ?

கம்யூனிச பொருதார கொள்கை என்பது நாட்டில் கிடைக்கப் பெறும் பொருளை அனைவரும் சரிசமமாக பிரித்துக் கொள்வதற்கு சொல்லப்படும். உதாரணமாக கூறினால் பண்டைய காலத்தில் உணவிற்காக வேட்டையாடும் பொருளை அனைவரும் பங்கு பிறித்து எடுத்துக் கொள்வதை போன்றதாகும்.

2.கேப்பிடலிச பொருளாதார கொள்கை என்றால் என்ன?

 நாட்டில் கிடைக்கப் பெரும் பொருளை யார் எடுத்தாரோ அவரே அதற்கு முழு உரிமை பெறுவார் என்பதாகும்.இதற்கு உதாரணம் யார் உணவை வேட்டையாடினாரோ அவரே அதனை வைத்துக்கொள்ளலாம் என்பதை போன்றதாகும்.

3.சோசியலிசம் என்றால் என்ன.?

நாட்டில் கிடைக்கப்பெறும் பொருளை மக்களின் தேவைக்கு ஏற்பவாறு அரசே பங்கிட்டு கொடுப்பதற்கு சொல்லப்படும்.உதாரணமாக வேட்டையாடிய பொருளை அரசு தன் கையில் எடுத்து அதனை அவரவரின் தேவைக்கேற்ப வழங்குவதை போன்றதாகும்.இவற்றில் ரஷ்யா,சீனா போன்ற பெரும் நாடுகள் கம்யூனிச பொருளாதார கொள்கை கொண்ட நாடுகளாகவும், அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற நாடுகள் கேப்பிடலிச பொருளாதார கொள்கை கொண்ட நாடுகளாகவும்,இந்தியா போன்ற சில நாடுகள் சோசியலிச பொருளாதார கொள்கை கொண்ட நாடுகளாகவும் மேலோட்டமாக பார்க்கப்படுகின்றது.

இப்பொழுது இம்மூன்று கொள்கைகளில் எக்கொள்கை மக்களின் பொருளாதார வளர்சிக்கு மிக உதவியாக இருக்கும் என்பதை என்னுடைய கண்ணோட்டத்தில் விவரிக்க விரும்புகின்றேன்.

எது சிறந்த கொள்கை?

என்னைப்பொருத்தமட்டில் இம்மூன்று கொள்கைகளையும் வரம்பு மீறாமல் கடைபிடிப்பதே ஒரு நாட்டு மக்களின் பொருளாதார வளர்சிக்கு காரணமாக அமையும் என்று நான் நம்புகின்றேன்.நாட்டில் ஒருவன் அதிகம் உழைக்கின்றான் எனில் அவனுக்கு அப்பொருளில் கூடுதல் உரிமை கொடுப்பதில் தவறேதும் கிடையாது என்பதே எனது கண்ணோட்டமாகும். இதனடிப்படையில் கேப்பிடலிசம் என்பதும் ஒரு நாட்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய சிறந்த பொருளாதார கொள்கையாகவே நான் காண்கின்றேன். ஏனெனில் ஒருவன் மட்டும் உழைத்து பலரும் சரிசமமாக பிறித்துக்கொள்வது என்பது ஒரு காலத்தில் மிகப்பெரும் அடக்குமுறைக்கு காரணமாகவும் அமையலாம் என்பதும் எனது கருத்தாகும்.

அவ்வாறே இல்லாத ஒருவனுக்கு பகிர்ந்து அளிப்பது என்பதும் மிகச்சிறந்த செயலேயாகும்.ஏனெனில் ஏதுமில்லாத ஒருவனுக்கு ஏதேனும் சில பொருட்களை கொடுத்து உதவுவது என்பது அவனுக்கு புதிய வாழ்வை அமைத்து கொடுப்பதைப்போன்றதுதானே.!இதனடிப்படையில் கம்யூனிசம் என்பதும் ஒவ்வொரு நாட்டிற்குமான சிறந்த பொருளாதார கொள்கையாகவே காணப்பட வேண்டும் என்பதும் எனது கண்ணோட்டமாகும்.

அவ்வாறே அத்தியாவசிய பொருட்களை அரசே பொறுப்பேற்று அதை சீராக பங்கிடுவதும் ஒரு நாட்டின் பொருளாதார நிலையை பாதுகாப்பதற்கான சிறந்த வழிமுறையேயாகும்.ஏனெனில் அத்தியாவசிய பொருட்களை முதலாளிகளின் கையில் கொடுத்துவிடுவதோ அல்லது மக்களின் கைகளிலேயே விட்டுவிடுவதோ பொருளாதார தட்டுப்பாட்டிற்கு காரணமாக அமைந்துவிடலாம்.எனவே இதனடிப்படையில் சோசியலிசமும் ஒவ்வொரு நாட்டிற்கும் தேவையான சிறந்த பொருளாதார கொள்கையாகவே இருக்கின்றது.

(குறிப்பு)இங்கு மிக முக்கியமான விஷயம் என்னவெனில் எப்பொழுது இவை மூன்றிலும் வரம்பு மீறப்படுமோ அப்பொழுதே அந்நாட்டின் பொருளாதார கட்டமைப்பும் சீர்கெட்டுவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2021

ஆரோக்கியமே ஒரு மனிதனை முழுமைபடுத்துகின்றது..!(Be healthy)



உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் ஆரோக்கியமே இவ்வுலகின் மிகச் சிறந்த செல்வம் என்பதாகவே இவ்வுலகில் உள்ள அத்துனை மதங்களும் அதன் தலைவர்களும் போதித்துவிட்டு சென்றுயிருப்பதை நம்மால் வரலாற்றில் காண முடிகின்றது.ஆம் காந்தி ஜீ: "இந்த உலகில் தங்கம்,வெள்ளியை விட உண்மையான செல்வம் அது ஆரோக்கியம் மட்டுமே என்று கூறியிருக்கின்றார்.அவ்வாறே நபிகள் நாயகம்:"இந்த உலகில் இறைவனிடம் கேட்க வேண்டிய முதல் செல்வம் அது ஆரோக்கியமே "என்பதாக கற்றுக் கொடுத்ததாகவே வரலாற்றில் நம்மால் காண முடிகின்றது.

இவ்வாறே புத்தரும் "உடல் ஆரோக்கியமே உலகின் மிகச்சிறந்த செல்வம்' என்பதாக போதித்திருப்பதையும் நம்மால் காணமுடிகின்றது.இப்படி உடல் ஆரோக்கியத்தின் மேன்மையை உணர்ந்த அந்த மஹான்கள் எல்லோரும் இந்த உலகில் ஒரு முழுமைபெற்ற மனிதர்களாகவே தங்களை நிலைநாட்டிவிட்டுச் சென்றிருக்கின்றனர்.

உண்மையில் இந்த உலகில் மனிதர்களை இரண்டே வகையில் நாம் உள்ளடக்கிவிடலாம்.ஒன்று நோய்வாய்பட்டு தன்னுடைய ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்காக போராடும் ஒரு சாரார்கள்,மற்றொன்று தன்னுடைய ஆரோக்கியத்தை பேணிக்காப்பதற்காக போராடிக்கொண்டிருக்கும் மற்றொறு சாரார்கள்.இவ்விரண்டு சாரார்களில் நீங்கள் எந்த சாரார்களில் இருக்கின்றீர்கள் என்பதை ஒரு கனம் சீர் தூக்கிப்பார்த்துக்கொள்ளுங்கள்.
ஆக ஆரோக்கியத்தை எப்பது பாதுகாப்பது என்பது சம்மந்தமாக பார்ப்பதற்கு முன்பாக முதலில் ஆரோக்கியம் என்றால் என்ன என்பது குறித்து பார்த்துவிடுவோம்..!

ஆரோக்கியம் என்றால் என்ன.?

"நாம் விரும்பியவாறு சுதந்திரமாக செயல்படும் நிலைக்குத்தான் ஆரோக்கியம் என்று சொல்லப்படும்.ஆம் உடல் ரீதியாக நாம் சுதந்திரமாக செயல்படும் அந்த காலம்தான் நம் வாழ்வில் கிடைக்கப்பெற்ற வசந்த காலம். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் அதிகப்படியாக ஆசிப்பது இந்த சுதந்திர காலத்தைத்தான்.தான் விரும்பிய எதனையும் எவ்வித தங்குதடையுமின்றி சுதந்திரமாக செய்ய வேண்டும் என்பதே ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கும் தனிப்பட்ட பேராசையாகும்.பெரும்பாலான மனிதர்களுக்கு அது வெறும் பேராசையாகவே கடந்து சென்றுவிடுகின்றது.

இந்த கட்டுரையில் நான் உடல் ஆரோக்கியத்தை காப்பதற்கான சில வழிமுறைகளை குறிப்பிட்டாலும் அவற்றைவிட உங்களிடம் நான் வேண்ட நினைப்பதெல்லாம் ஒன்றுதான் "உங்கள் உடல் ஆரோக்கியம் உங்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை  நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்" என்பதேயாகும்.ஆம்..!உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்ளும்படி ஒவ்வொரு சமயமும் ஒருவர் உங்களுக்கு போதித்துக் கொண்டே இருக்கும் நிலையை தயவுகூர்ந்து  நீங்கள் அடைந்துவிடாதீர்கள். உண்மையில் அதைக்காட்டிலும் துரதிஷ்டமான  நிலை வேறெதுவுமில்லை.

ஆகவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதே உங்கள் வாழ்வின் முதல் இலட்சியமாக தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்.ஏனென்றால் நீங்கள் உடல் ஆரோக்கியமற்றுப்போகும்பொழுது நீங்கள் உங்களுடைய சுதந்திரத்தை இழப்பது மட்டுமின்றி உங்களை சுற்றியிருப்பவர்களின் சுதந்திரத்தையும் இழக்கச்செய்துவிடுவீர்கள்.இதற்கு நல்ல உதாரணம் குருடர்கள்தான்.அவர்கள் எல்லா காலமும் மற்றொரு மனிதரின் பக்கம் தேவையுற்றவர்ளாகவே ஆகிவிடுகின்றனர்.மேலும் இந்த அற்புதமான உலகின் பரந்து விரிந்த பாலைகளையும்,சோழைகளையும் பார்த்து ரசிக்கும் பாக்கியமற்று தனித்து விடப்பட்ட, இருண்ட உலகில் தத்தளிக்கும் வெற்று சடலங்களாக மாறிவிடுகின்றனர்.ஆக அந்த குருடர்களின் நிலையே ஆரோக்கியத்தின் உண்மை பொருளையும்,அவசியத்தையும் மிகத்தெளிவாக விளக்குகின்றது என்பதால் இந்த சிறு உதாரணத்துடனே இக்கட்டுரையின் அடுத்த கட்டத்திற்கு நான் செல்கின்றேன்.

உடல் ஆரோக்கியத்தை எவ்வாறு பேணிக்காப்பது..?

உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதற்கு நாம் எல்லா காலங்களிலும் கடைபிடிக்க வேண்டிய நான்கு முக்கிய வழிமுறைகளை இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.

ஆரோக்கியத்தை காப்பதற்கான வழிகள்:

1.Having Food -உணவு முறை

2.Having Rest -ஓய்வு எடுத்தல்

3.Doing exercise -உடற்பயிற்சி செய்தல்

4.Beeing cleanliness -தூய்மை கடைபிடித்தல்.

1.நம் உடல்நலனை பேணிப்பாதுகாக்க முதல் காரணியாக இருப்பது நம் உணவு சார்ந்த பழக்கவழக்கமாகவே இருக்கின்றது.ஆகவே அவற்றைப்பற்றியே  இங்கு நான் முதலில் விளக்குவதற்கு விரும்புகின்றேன். உணவு சார்ந்த பழக்கவழக்கத்தை நாம் இங்கு இரண்டு பகுதிகளாக பிறித்துக்கொள்ளலாம்.

1.நாம் நமக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டிய உணவு.

2.நாம் நம்மைவிட்டும் தவிர்த்துக் கொள்ள வேண்டிய உணவு.

நாம் நமக்காக தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உணவு நாம் உண்ணுவதற்கு தகுதியானதுதானா என்பதை எல்லா சமயங்களிலும் ஒன்றிற்கு பலமுறை சோதித்துப்பார்த்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.அது எவ்வாறு சோதித்துப்பார்ப்பது? என்பதாக நீங்கள் கேட்டால்..!அதற்கான இரு பொது விதிகளையும் இங்கு நான் குறிப்பிடுகின்றேன்.

1.அவை சுத்தமானதாக இருக்க வேண்டும்.

2.அவை சுவையானதாக இருக்க வேண்டும்.

இந்த இரண்டு விதிகளுக்கும் அப்பாற்பட்ட உணவுகளை எப்பொழுதும் தவிர்த்துவிடுவதே நம் ஆரோக்கியத்தை பேணிக்கொள்வதற்கான ரகசிய சூட்சமமாகும்.ஆம் ..!சுத்தமற்ற உணவே உங்கள் உடல் ஆரோக்கியத்தை தாக்கும் முதல் எதிரி என்பதை ஒருபொழுதும் மறந்துவிடாதீர்கள்.குறிப்பாக வயிற்றுப்போக்கு,வாந்தி பேதி போன்ற நோய்கள் ஏற்பட சுகாதாரமற்ற ஃபாஸ்ட் புட் உணவுகளே முக்கிய காரணியாக இருக்கின்றது என்பதாகவே மருத்துவர்களில் பலரும் குறிப்பிடுகின்றனர்.

அவ்வாறே தெருக்களின் ஓரமாக திறந்த வெளிகளில் விற்கப்படும் தின்பண்டங்களாலேயே காலரா,மற்றும் டைஃபாய்டு,போன்ற வைரஸ் காய்ச்சல்களும் பரவுகின்றது என்பதாகவே மருத்துவர்கள் நமக்கு எச்சரிக்கின்றனர்.ஆகவே உங்களால் முடிந்த அளவு சுகாதாரமான உணவுகளையே உங்களுக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக சுவையான உணவை நாம் நமக்காக தேர்ந்தெடுத்துக் கொள்வதிலும் கவனம் செலுத்துவதில் எவ்வித தவறும் கிடையாது.நம்மில் பலரும் விலையுயர்ந்த உணவு பொருட்களை அதிக தொகைகொடுத்து வாங்க தயாராகவே இருக்கின்றோம்.ஆனால் அவை நம்முடைய உடல்நலத்தை காக்கும் சுவைமிக்கதுதானா.?என்பதை கவனிக்க பல சமயங்களில் தவறிவிடுகின்றோம்.

வெறும் அயல் நாட்டு உணவு என்ற பெயரிற்காகவே அதனுடைய சுவை மற்றும் அதன் விளைவு போன்றவற்றை மறந்துவிட்டு அதிக விலை கொடுத்து உண்ணுகின்றோம்.அவை மிக காரம் நிறைந்து,நம் மனதிற்கு பிடிக்காத சுவையில் இருந்தாலும் அவற்றை பற்களை கடித்துக் கொண்டு விழுங்கி விடுகின்றோம்.இவற்றிற்கு மாறாக நம்முடைய பாரம்பரிய உணவு வகைகளை மிக சுவையாக சமைத்து உண்ணுவதையே நம் உடல் ஆரோக்கியத்தை பேணிக்காப்பதற்கான  மிகச்சிறந்த வழி என்பதாக நான் முழுமையாக நம்புகின்றேன்.

மேலும் மற்றொரு விஷயத்தையும் இங்கு நான் சுட்டிக்காண்பிப்பதற்கு கடமைபட்டிருக்கின்றேன்.அதாவது நம்மில் பலரும் ஆரோக்கியத்தை பாதுகாக்கவேண்டுமானால்,பாதி அவியல் கொண்ட சுவையற்ற உணவையே எடுத்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் உண்மை என்னவெனில் பாதி அவியலான உணவு அதிக சத்துக்களை கொண்டதாக கருதப்பட்டாலும் அவற்றை முறையாக,முழுமையாக சமைத்து உண்ணும்பொழுது அதனுடைய முழு சக்தியும் கிடைக்கவே செய்கின்றது என்பதாகவே மருத்துவர்களில் பலரும் குறிப்பிட்டுகாட்டுகின்றனர்.

ஆகவே சுத்தமான மேலும் சுவையான உணவை உங்கள் மனதிற்கு பிடித்த வகையில் உண்டு மகிழுங்கள்.மேலும் உங்கள் ஆரோக்கியத்திற்கு நீங்கள் மட்டுமே முழு பொறுப்புடையவர்கள் என்பதை ஒருபொழுதும் மறந்துவிடாதீர்கள்.

2.தவிர்த்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகள்.

உண்ணக்கூடாத உணவு என்பது அசுத்தம் நிறைந்த பார்ப்பதற்கே அறுவறுப்பாக தோன்றுகின்ற அனைத்து விதமான உணவுகளையும் முடிந்தளவு தவிர்த்துவிடுங்கள்.குறிப்பாக போதை தரும் பொருட்களில் எதுவாக இருந்தாலும் அவற்றை முற்றிலுமாக தூரமாக்கிவிடுங்கள்.அவ்வாறே அசுத்தமான கால்நடைகளின் இறைச்சிகளையும் முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள்.அவை மிக உயர்ந்த சுவையில் சமைக்கப்பட்டிருந்தாலும் சரியே.மது உங்களுடைய உடல் ஆரோக்கியத்தை உறிந்து குடித்துவிடும் மிக மோசமான எதிரி என்பதை எக்காலமும் நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் வாழ்வின் எச்சந்தர்ப்பங்களிலும் அவை இடம் பிடித்துவிடாதபடி உங்களைச் சுற்றி ஒரு அரண் அமைத்துக்கொள்ளுங்கள்.உங்கள் ஆரோக்கியம் நிச்சயம் நீடித்து இருக்கும் என்பதை நான் வாக்குறுதி அளிக்கின்றேன். இவற்றைப் போன்று நம் உடல் ஆரோக்கியத்தை பேணுவதற்கான பல்வேறு வழிகாட்டுதல்களை  "முழுமை பெற்ற மனிதனாக இரு"என்ற எனது புத்தகத்தில் விரிவாக விளக்கி இருக்கின்றேன்.அவற்றை கட்டாயம் வாசியுங்கள்.உங்களை முழுமை பெற்ற மனிதராக ஆக்கிக் கொள்ளுங்கள்.

பழம் நிறைந்த மரமே கல் அடிபடும்.(Be a good Tree)


கிராமத்தின் எல்லையில் ஒரு துறவி இருந்தார்.மக்கள் அவரிடம் அவ்வப்பொழுது சென்று சில நல்லுபதேசங்களை செவிமடுத்து வருவது வழக்கமாக இருந்தது.ஒரு நாள் அக்கிராமத்தில் சிறந்த கல்வியாளராகவும், பண்பாலராகவும் திகழ்ந்து வந்த ஒரு வாளிபன் அத்துறவியை சந்தித்து "தன்னை இந்த ஊர் மக்களில் சிலர் மிக மோசமானவன் என்றும் பிரயோஜனமற்றவன் என்றும் தூற்றிக்கொண்டே இருக்கின்றனர்"அது எனக்கு மிக வருத்தத்தை தருகின்றது.எனவே நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார்..!

அதற்கு அத்துறவியோ புன்னகைத்துக்கொண்டே நீ என்னிடம் வந்த பாதையில் இரண்டு மாமரங்களை கடந்து வந்தாயா என்று கேட்டார் .உடனே அவ்வாலிபனும் ஆம் அதனை கடந்துதான் வந்தேன் என்றார்.!அம்மரத்தின் அடியில் யாரையும் கண்டாயா என்று கேட்டார்.அதற்கு அவ்வாலிபன் ஆம் "ஒரு மரத்தின் அடியில் நிறைய சிறுவர்கள் கூடி நின்று கற்களை எறிந்து மாங்கனியை பறித்துக்கொண்டிருந்தார்கள்.மற்றொரு மரமோ யாருமற்ற காலியிடமாக கிடந்தது என்று பதிலளித்தான்.

சற்றும் தாமதமின்றி "இதனைப்போன்றுதான் நீயும்" என்றார் துறவி.உன்னிடம் நற்பண்புகளும்,நற்சிந்தனைகளும் இருக்கும் காலெமெல்லாம் உன்னை நோக்கி சில மக்கள் கல்எறிந்து கொண்டேதான் இருப்பார்கள்."நன்றாக நினைவில் வைத்துக்கொள் "உன் மீது காழ்புணர்ச்சியிலும்,பொறாமையிலும் சிலர் கல் எறிகின்றார்கள் என்றால் நீ பழங்கள் நிறைந்த மரமாக இருக்கின்றாய் என்பதை உணர்ந்துகொள் என்று அவ்வாலிபனுக்கு அத்துறவி உபதேசித்தார்..!அவ்வாலிபனும் அத்துறவியின் அந்த உண்மையான வார்த்தைகளை செவிமடுத்து மனம்நெகிழ்ந்து விடைபெற்றான்.

நீதி :

 1.ஒவ்வொரு ஊரிலும் நான்கு பேர் உங்களை இழிவாக பேச காத்துக் கொண்டேதான் இருப்பார்கள்.

2.நீங்கள் உயர்ந்த மனிதர் என்பதற்கு காழ்புணர்ச்சியாளார்களும், பொறாமைகாரர்களுமே சிறந்த அடையாளம்.

3.காழ்புணர்சியாளார்களையும்,பொறாமைகாரர்களையும் கண்டுகொள்ளவே தேவையில்லை.அவர்களின் வார்த்தைகளுக்கும் மதிப்பளிக்க தேவையில்லை.

4.உங்களுடைய இலட்சியத்தை நோக்கி நடைபோட்டுக்கொண்டே இருங்கள். நீங்களும் உங்கள் செயலும்தான் உங்களுக்கான மதிப்பீடு.மக்களின் பார்வையோ,அங்கிகாரமோ அல்ல.

திங்கள், 2 ஆகஸ்ட், 2021

உங்களிடம் இருப்பவற்றின் மதிப்பை உணர்ந்து கொள்ளுங்கள்.(satisfy what you have)


உங்களிடம் இருப்பதை பொருந்திக்கொள்ளுங்கள் என்று குறிப்பிடுவதைவிட முதலில் உங்களிடம் இருப்பதின் மதிப்பை உணர்ந்துகொள்ளுங்கள் என்றே நான் குறிப்பிட விரும்புகின்றேன்.ஏனென்றால் இன்றைக்கு நம்மில் பலரும் தன் மதிப்பையும் சரிவர புரிந்துகொள்ளவில்லை,தன்னிடம் இருப்பவற்றின் மதிப்பையும் சரிவர புரிந்துகொள்ளவில்லை என்பதே கசப்பான உண்மையாக இருக்கின்றது.பிறரிடம் இருக்கும் துரும்புகளும்கூட நம் கண்களுக்கு பெரிதாக தோன்றிவிடுகின்றது.ஆனால் நம்மிடமுள்ள பெரும் பெரும் அருட்களெல்லாம் நம் கண்களைவிட்டும் தூரமாக்கப்பட்டுவிடுவது என்பது நம் வாழ்வின் மிகப்பெரும் சாபம் என்பதாகவே நான் கருதுகின்றேன்.

சிறியதோ பெறியதோ நம்மிடமுள்ளவற்றின் மதிப்பை என்றுவரை நாம் உணர்ந்து கொள்ளமாட்டோமோ அன்று வரை நம் வாழ்வில் மன அமைதி என்பதற்கு இடமே இல்லை என்றே நான் கருதுகின்றேன்.இதற்கு உதாரணமாக ஒரு ஏழை வாளிபனின் நிகழ்வை இங்கு நான் சுட்டிக்காண்பிப்பதற்கு விரும்புகின்றேன்."அவ்வாளிபன் ஒரு விபத்தில் தாய் தந்தையரை இழந்து தன் குடிசை வீட்டில் இருளில் சிறிய வெளிச்சத்திற்கு முன்பாக அமர்ந்து சப்தமிட்டு அழுதுகொண்டிருந்தான்.அப்பக்கமாக கடந்து சென்றவர்களில் சிலரும் அவனுக்கு சில ஆறுதல்கள் சொல்லிவிட்டு கடந்து சென்று கொண்டுமிருந்தார்கள்.

இரவின் இருள் அதிகமாகத்தொடங்கவே,யாருமற்ற அவ்வாளிபனின் அழுகையும் அதிகமாக தொடங்கியது.அப்பொழுது அவ்வழியாக ஒரு துறவி கடந்து செல்லவே,இச்சப்தத்தை அவர் செவியுற்றார்.பிறகு அச்சப்தம் எங்கிருந்து வருகின்றது என்பதை நோக்கி நடக்கலானார்.அப்பொழுது இந்த சிறுவன் இருந்த வீட்டின் வாயிலையும் அவர் வந்தடைந்தார்.ஆனால் அச்சிறுவனோ இவரை கண்ட பிறகும் அழுதுகொண்டே இருந்தான்.உடனே அவன் அருகில் சென்ற துறவி அவனுடைய தலையை கோதிவிட்டு,ஓ வாளிபனே நீ ஏன் அழுகின்றாய் என்று கேட்டார்.

என் பெற்றோர்கள் எதிர்பாராத விபத்தில் இறந்துவிட்டார்கள் என்று நடந்ததை விவரித்தான்.மேலும் தனக்கென்று இன்று யாருமில்லை என்பதையும் முறையிட்டான்.அதனை கேட்ட துறவி கவலைப்படாதே நான் இருக்கின்றேன் என்றார்.உடனே அவ்வாளிபன் மிக்கநன்றி என்று கூறிவிட்டு மீண்டும் அழத்தொடங்கினான்.ஏன் நீ மீண்டும் அழுகின்றாய் என்று அத்துறவி  அவனிடம் கேட்கவே.நான் ஏதுமற்றவனாக இருக்கின்றேன்.எனவே என் வாழ்வே முடிந்துவிட்டது என்றே நான் கருதுகின்றேன் என்று அவ்வாளிபன் பதிலளித்தான்.

அவ்வாளிபனின் மனோநிலையை புரிந்துகொண்ட துறவி "அப்படியா உன்னிடம் ஏதுமில்லை என்றே நீ நம்புகின்றாயா என்று திருப்பிக் கேட்டார்.அவ்வாளிபனும் ஆம் என்னிடம் மதிக்கதக்க எதுவுமே இல்லை என்றே நான் நினைக்கின்றேன் என்றான்.அப்படியா...!அப்படியானால் இதோ இந்த சிமிலியின் குமிழியை எனக்கு தருவாயா என்று துறவி கேட்டார். அவ்வாளிபனும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றான்.

துறவியும் அதனை எடுத்துக் கொண்டு அவர் பாதையை நோக்கி நடக்கத் தொடங்கிவிட்டார்.ஆனால் சிறிது தூரம் கூட அவர் கடந்திருக்கமாட்டார் அவ்வாலிபனோ "ஐயா துறவியே" சற்று நில்லுங்கள் என்று கூக்குறலிட்டான். அத்துறவியும் நின்றார்."ஐயா நீங்கள் எடுத்துச்சென்ற சிமிலியின் குமிழி இல்லாததால் என் விளக்கு அனைந்து என் வீடே இருளாகிவிட்டது.எனவே தயவு செய்து இந்த குமிழியை என்னிடமே திருப்பி தந்துவிடுங்கள் என்றான். அப்பொழுது அத்துறவியும் புன்முறுவல் பூத்துக் கொண்டே "ஓஹ் இது உனக்கு அவ்வளவு அவசியமான பொருளா"என்று கூறிக் கொண்டே அவ்வாளிபனின் கையில் ஒப்படைத்தார்.

பிறகு கூறினார். "ஓ வாலிபனே இந்த உலகில் நீ எது வைத்திருந்தாலும் அதனுடைய மதிப்பு என்ன என்பதை முதலில் உணர்ந்து கொள்.உன்னிடமுள்ள எப்பொருளையும் தாழ்வாக கருதாதே...!இவ்வாறு நீ செய்தால் நிச்சயமாக உன் வாழ்வில் நீ மிகச்சிறந்த மனிதனாக வருவாய் என்று உபதேசித்துவிட்டு கடந்து சென்றுவிட்டார்.அப்பொழுதுதான் அச்சிறுவன் இவ்வுலகில் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்கின்றது என்பதை உளமாற உணரத்தொடங்கினான்.பிறகு அக்கிராமத்திலேயே தலை சிறந்த படைவீரனாகவும் திகழ்ந்தான் என்றும் வரலாறு நீளுகின்றது.

நீதி:

இவ்வாளிபனின் மனோ நிலையே இன்றைக்கு பெரும்பாலான மக்களிடம் குடிகொண்டிருக்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.பல ஆயிரம் பொருட்களை குவித்துவைத்திருந்தாலும் உங்கள் மனமோ இல்லாத ஒன்றை மட்டுமே காண்பித்து உன்னிடம் ஒன்றுமே இல்லை ஆகவே நீ ஒன்றுமில்லாதவனே என்று நிறூபிக்கத்துடித்தால் தயவுசெய்து அந்த எண்ணத்தை தூக்கி எறிய தயாராகிக்கொள்ளுங்கள்.மேலும் அவற்றிற்கு உங்களிடமுள்ள பொருட்களின் மீது உள்ள மதிப்பை உணர்ந்து கொள்வதற்கான பயிற்சியை வழங்குங்கள்.இல்லையெனில் உங்கள் வாழ்வு முழுவதும் இருண்ட இருளாகவே அமைந்துவிடும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.

வாசிப்பை வழக்கமாக்குங்கள் வழமாக வாழுங்கள்.(Book reading)



வாசிப்பு ஒருவன் தன்னை செம்மைபடுத்திக் கொள்வதற்கான சிறந்த வழியாகும்.யார் வாசிப்பை தொடர்ந்து கடைபிடித்து வருவாரோ அவரை வெள்வது என்பது அவ்வளவு சுலபமான விஷயமல்ல என்றே நான் கருதுகின்றேன்.வெளிப்படையாக கூற வேண்டுமானால் இன்றைய தலைவர்கள் அனைவரும் நேற்றைய வாசிப்பாளர்களே.ஆம்..!புத்தகங்களை வாசிப்பதின் மூலம் மட்டுமே சமூகத்தில் ஒரு சிறந்த மனிதன் உறுவெடுக்க முடியும் என்பது எனது ஆழமான நம்பிக்கையாக இருக்கின்றது.ஏனென்றால் புத்தகங்கள்தான் முந்தைய வரலாறுகளையும் அனுபவங்களையும் சுமந்து வந்து  பிந்தைய சமூகத்திற்கு அழகுற படிப்பினையை போதிக்கும் அற்புத கருவியாக இருக்கின்றது.

யார் அவற்றின் மூலம் படிப்பினை பெற்றுக்கொள்ள விரும்புகின்றார்களோ அவர்களே தன் சமூகத்திற்கான சிறந்த தலைவர்களாக தங்களை உறுவாக்கி கொள்ளவும் செய்கின்றனர்.யார் அவற்றை உதாசினப்படுத்துகின்றார்களோ அவர்கள் சமூகத்தில் மூடர்களாகவே வலம்வர விரும்புகின்றனர்.புத்தக வாசிப்பு என்பது உண்மையிலேயே ஒரு தனி உலகமாகும்.அது அறிவும், சிந்தனையும்,அனுபவங்களும் மட்டுமே பூத்துக்குழுங்கும் ஒரு அற்புத சுவனமாகும்.அதற்குள் நுழைந்துவிட்டால் வண்ண வண்ண பூக்களும், அருசுவை மிகுந்த கனிகளும் நம்மை திக்குமுக்காட செய்துவிடும்.எதை பறித்து சாப்பிடுவதென்று?..

இதனால் அதற்குள் நுழைந்துவிட்டவர்களால் மிக எளிதில் அதனைவிட்டும் வெளியேறிவிட முடியாது என்பதே நான் அறிந்த உண்மை.ஏனெனில் அறிவு தாகம் என்பது அணைபோட முடியாத பேரழையாக இருக்கின்றதல்லவா. லட்சோப லட்ச புத்தக வடிவங்களில் வைரமும்,வைடூரியங்களும் நம் கண்களுக்கு முன்பே கொட்டிக்கிடக்கின்றது.ஆனால் நம்மில் பலரும் வீண் வேடிக்கையெனும் கூலாங்கற்களையே நமக்காக தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்பது வேதணையான விஷயமாகும்.

எனக்கு தெரிந்து மிக அற்புதமான (டைம் பாஸ்) நேர கழிப்பு என்பது புத்தக வாசித்தலாகவே இருக்கின்றது என்றே நான் கூறுவேன்.ஏனெனில் நம் நேரமும் பயனுள்ள முறையில் கழிந்துவிடுகின்றது.மேலும் நம் ஆன்மாவிற்கு அறிவூட்டிய கடமையும் நமக்கு நீங்கிவிடுகின்றது.அண்பர்களே சற்று நிதானமாக யோசித்துப் பாருங்கள்.!வாசிப்பு என்பது நம் வாழ்வில் எத்தனையோ மாற்றங்களை தரக்கூடியதுதான் என்பதை நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்.

வாசிப்பின் பலன்கள். 

1.சிறந்த வழித்துணையாக இருக்கும்.

2.சிந்தைனையை சுறுசுறுப்பாக்கி வைக்கும்.

3.மனதை உத்வேகப்படுத்தும்.

4.கற்பனைத்திறனை அதிகரிக்கச் செய்யும்.

5.மொழி புலமையை அதிகரிக்கச் செய்யும்.

6.நினைவாற்றலை அதிகரிக்கச் செய்யும்.

7.மன அமைதியை தரும்.

8.கவனச் சிதறல்களைவிட்டும் பாதுகாக்கும்.

9.மிகச் சிறந்த பொழுதுபோக்காக இருக்கும்.

10.அன்றாட நிகழ்வுகளை அறியச் செய்யும்.

மேற்கூறிய இந்த பத்து காரணங்களில் எக்காரணத்திற்காக வேண்டுமானாலும் நீங்கள் புத்தகங்களை வாசியுங்கள்.ஏனெனில் அனைத்தும் நம் வாழ்கைக்கு அவசியமானதே என்றே நான் நம்புகின்றேன். இறுதியாக ஒன்றை நான் கூறிக்கொள்கின்றேன்.இயந்திரத்தனமான உங்கள் உடலுக்கான வாழ்வை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு உங்கள் ஆன்மாவிற்கும் வாசிப்பு என்னும் வரப்பிரசாதத்தை சற்று விருந்தளியுங்கள்.!

இக்கட்டுரையின் விரிவு கருதி இத்தோடு இக்கட்டுரையை முடித்துக் கொண்டு பின்வரும் கட்டுரையில் புத்தகங்களை எவ்வாறு வாசிப்பது என்பது குறித்தும் அதனால் நம்மிடம் ஏற்படும் பலன்கள் குறித்தும் விவரிக்கின்றேன்.