ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

லாப நோக்கம் மட்டும் கொண்ட வியாபாரத்தின் ஆபத்துகள்

வியாபாரத்தின் அடிப்படை தத்துவங்கள் என்ற முந்தைய கட்டுரையிலேயே வியாபாரத்தின் நோக்கங்கள் குறித்து குறிப்பிட்டு இருந்தேன்.அதில் இன்றைய உலகம் மிக தீவிரமாக செயல்படுத்தத்துடிக்கும் லாப நோக்கம் மட்டும் கொண்ட வியாபார முறையும் ஒன்றாக குறிப்பிட்டு இருந்தேன்.மேலும் அது இந்த மனித சமூகவாழ்வை இறுதி நிலைக்கு அழைத்துச்சென்றுவிடும் ஆபத்தான வியாபாரமுறை என்பதாகவும் குறிப்பிட்டிருந்தேன்.எனவே இந்த கட்டுரையில் அது எப்படி இந்த மனிதசமூகத்திற்கு மிக ஆபத்து என்பதை விரிவாக பார்ப்போம்...!

1.மக்களிடம் செயற்கை தேவையை ஏற்படுத்துகிறது.

லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட வியாபார முறையானது மக்களின் தேவையை நிறைவேற்றுவதைவிடுத்து தங்களின் பொருளாதாரத்தை வளர்த்துக்கொள்வதற்காக மட்டும் மக்களிடம் செயற்கையான தேவையை ஏற்படுத்துவதை மைய்யமாகக்கொண்டு செயல்படக்கூடிய வியாபாரமுறை என்பதே இதில் ஒழிந்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து என்பதாக நான் கருதுகின்றேன்.ஏனெனில் இவற்றிற்கென்று எந்த வரைமுறைகளுமின்றி பொருளை மக்களின் தலையில் கட்டுவது மட்டுமே இந்த வியாபாரமுறையின் அடிப்படை கொள்கையாக அமைக்கப்பட்டிருக்கின்றது.

இதற்கு உதாரணமாக இன்றைய உற்பத்தி துறைகளில் லாபநோக்கோடு மட்டும் செயல்படும் பல்வேறு கார்பரேட் தொழில் கூடங்களை குறிப்பிடலாம். உதாரணமாக இன்றைக்கு குறிப்பிட்ட வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஒரு மாதத்திற்கு இத்தனை வாகனங்களை மக்களின் தலையில் கட்டிவிட வேண்டும் என்ற (Target)குறிக்கோளை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படுவதை இதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக நாம் பார்க்கலாம்.

மக்களுக்கு வாகனம் தேவையாகத்தான் இருக்கின்றது என்றாலும் அது எல்லா மனிதர்களுக்கும் தேவையற்றது என்பதும் நிதர்சனமாக இருக்கின்றது. ஆனால் அளவுக்கு அதிகமாக தயாரித்து வைத்திருக்கும் வாகனங்களை மக்கள் தங்கள் கையில் உள்ள பொருளை அல்லது பணத்தை கொடுத்து எப்படியாவது வாங்கிவிடவேண்டும் என்பதற்காகவே இந்த வியாபார முதலைகள் செயற்கையான தேவையை உறுவாக்குகின்றனர்.அதற்கு அவர்கள் பெரிதும் பயன்படுத்தும் ஆயுதம் மக்களின் பேராசையை தூண்டுவதேயாகும்.
ஆம் ..!
இன்று மக்கள் தங்களின் சொத்தை விற்றேனும் குறிப்பிட்ட சில பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வதற்கான ஆசையை விளம்பரங்களின் மூலம் ஊட்டி வளர்க்கப்படுகின்றது.இதனால் யார் அந்த பொருளை வைத்திருப்பாரோ அவர் சமூகத்தில் மிக மதிப்பிற்குறியவர் என்றும் யாரிடம் அது இல்லையோ அவர் சமூகத்தில் எவ்வித மதிப்புமற்றவர் என்றும் ஒரு ஆபத்தான சமூக கட்டமைப்பை இந்த லாபத்தை மட்டும் அடிப்படையாக கொண்ட வியாபாரமுறை உறுவாக்கிக்கொண்டிருக்கின்றது என்பதே எனது முதல் குற்றச்சாட்டாகும்.

இந்த வியாபார முறையை இப்படியும் விளக்களாம் என்றே நான் கருதுகின்றேன்.அதாவது குருடனும்கூட அவனுடைய சொத்தையோ அல்லது தன்னையோ இழந்து லாபநோக்கம் மட்டுமே கொண்ட சில வியாபாரிகளின் ஒரு அழகிய சித்திரத்தை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவதைப்போன்றதே இந்த லாப நோக்கம் கொண்ட வியாபாரமுறை என்றும் குறிப்பிடலாம்.

அந்த சித்திரத்தை குருடன் பார்க்கவே முடியாது என்றாலும் அது அழகானது என்று சில மக்களாலோ அல்லது அதை விற்கத்துடிப்பவர்களின் விளம்பரத்தாலோ வலியுறுத்தப்பட்டுவிட்டதால் அந்த குருடனும் அதை வலுக்கட்டாயமாக வைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தப்படுகின்றான்.இப்படி மனிதனின் அத்தியாவசியங்கள் என்பதெல்லாம் தாண்டி சவ்கரியங்கள் என்பதையும் கடந்து தேவையற்ற பொருட்கள் என்ற வட்டத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைக்கப்பட்டு அது உலகலவில் சந்தைப்படுத்தப்படுவது என்பது இந்த மனித இனத்திற்கான மிகப்பெரும் அழிவுப்பாதையேயன்றி வேறு என்னவென்று சொல்வது

இத்தகைய வியாபாரமுறைதான் இந்த மனித சமூகத்தை மிகப்பெரும் ஆபத்தில் தள்ளிவிடும் மிகக்கொடிய வியாபாரமுறை என்று நான் குறிப்பிடுகின்றேன்.ஆனால் இன்று இந்த உலகையே இந்த வியாபார முறைதான் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றது என்பதையும் நிதர்சனமாக நான் காண்கின்றேன்.இது இந்த மனித சமூகத்திற்கு பொருளாதார சீர்கேட்டை தருமே தவிர ஒரு முறையான வசதிமிக்க மனநிறைவுபெற்ற வாழ்வியலை ஒருபொழுதும் தராது என்பதே எனது உறுதியான கண்ணோட்டமாக இருக்கின்றது.

ஏனெனில் மக்களின் தேவையே வியாபாரத்தின் அடிப்படை விதி என்றிருக்கும்பொழுது மக்களிடம் செயற்கையான தேவையை உறுவாக்கி அவர்களிடம் வியாபாரம் செய்து அவர்களை உறிஞ்ச நினைப்பது என்பது இந்த மனித சமூகத்தை பேரழிவில் தள்ளுவதற்கான முயற்சியாக அமையுமே தவிர இந்த மனித சமூகத்தை முன்னேற்றப் பாதையில் ஒருபோதும் அழைத்துச் செல்லாது என்பதே எனது தீர்க்கமான முடிவாகவும் நான் கருதுகின்றேன்.

2.பொருட்களை பதுக்கி வைத்துக்கொள்ள தூண்டுகிறது.

வெறும் லாப நோக்கை மட்டுமே கொண்ட இந்த வியாபார முறையே பொருட்களை பதுக்கி வைத்து மக்களிடம் பஞ்சத்தை ஏற்படுத்துவதற்கும், விலைஏற்றம் செய்வதற்கும் மிக அடிப்படை காரணியாக இருக்கின்றது என்றே நான் கருதுகின்றேன்.இன்று மக்களின் தேவைக்கு தகுந்தவாறு பொருட்களை பரிமாறிக்கொள்ள வேண்டிய சூழலிலும்கூட இந்த லாப நோக்கு கொண்ட வியாபாரமுறை அதனை பதுக்கி வைத்துக்கொண்டு மக்களை அலைக்களிக்கச் செய்து பிறகு மிகப்பெரும் விலைக்கு மக்களிடம் தலையில் கட்டிவிடுகின்றது என்பதை நம்மால் ஒர்போதும் மறுக்க முடியாது.

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைப்பது குற்றச்செயலாக அரசு சட்டம் இயற்றி இருந்தாலும் பல்வேறு சமயங்களில் அரசின் உதவியோடே இந்த மாபாதகச் செயல் அரங்கேற்றப்படுகின்றது.லாபமடைவது என்ற சுயநலனை மட்டுமே அடிப்படையாகக்கொண்ட இந்த வியாபாரமுறை மக்களின் நிலைகுறித்தோ அல்லது மக்களின் வாழ்வாதாரம் குறித்தோ எந்த கவலையும் படத்தயாராக இல்லை என்றிருக்கும்பொழுது லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட அந்த வியாபாரிகள் மனசாட்சியின்றி மக்களை உறிஞ்சுவதற்காக விலையை தாருமாறாக உயர்த்தி விற்பனை செய்கின்றனர்.அப்படி மக்கள் வாங்க மறுக்கும்பொழுது அதனை வேண்டுமென்றே பதுக்கி வைத்துக் கொள்கின்றனர்.எனவேதான் இந்த மனசாட்சியற்ற வெறும் லாபத்தை மட்டுமே நோக்கமாகக்கொண்ட வியாபார முறை மக்களை அழிவுப்பாதைக்கு அழைத்துச்செல்லும் மிகப்பெரும் ஆபத்து என்று நான் கூறுகின்றேன்.

3.குறிப்பிட்ட சிலருக்கே இது உதவி புரிகிறது.

லாப நோக்கம் மட்டும் கொண்ட இந்த வியாபார முறையானது அடித்தட்டு வியாபாரி தொடங்கி உயர் மட்ட வியாபாரி வரை அனைவரிடமும் குடி கொண்டிருந்தாலும் இது உயர்மட்ட வியாபாரிகளிடமே அதிகம் குடிகொண்டிருக்கின்றது என்பது எனது கண்ணோட்டமாகும்.மேலும் இது உயர்மட்ட நுகர்வோர்களுக்கு மட்டுமே அதிகம் உதவக்கூடியதாகவும் நம்மால் காணமுடிகின்றது.

உதாரணமாக ஒரு அத்தியாவசியப்பொருள் அது சந்தையில் எங்கும் கிடைக்கவில்லை என்றிருக்கும்பொழுது அதனை குறிப்பிட்ட சிலர் மட்டும் மிக எளிதில் பெற்றுவிடுவது இதற்கு மிகப்பெரும் சான்றாக இருக்கின்றது.வெறும் லாப நோக்கோடு மட்டும் செயல்படும் இந்த வியாபாரமுறை குறிப்பிட்ட செல்வாக்குடையவர்களை குறிவைத்தே நகர்கின்றது என்பதையே இவ்வாறு நான் குறிப்பிடுகின்றேன்.குறிப்பாக சொல்லப்போனால் உழைப்பின்றி பெரும் செல்வங்களை திரட்டிவைத்திருப்பவர்களுக்கு எத்தகைய தொகையும் பெரிதாக தெரியப்போவதில்லை என்பதை கருத்தில்கொண்டே இந்த வியாபாரமுறை சுழல்கின்றது என்பதாகவும் இதனை கூறலாம்.

பெரிய அளவிலான மக்கள் இந்த வியாபாரத்தால் பயனடையவும் முடியாது.அவ்வாறே குறிப்பிட்ட சிலர் மட்டும் இதில் பெரும் லாபம் அடைந்து கொள்ளவும் முடியும் என்பதே இந்த வியாபாரமுறையின் முக்கிய முரன்பாடுடைய அபாயமாக இருக்கின்றது.எனவே குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே உதவி செய்யும் இந்த வியாபார முறையானது மக்களின் உயர்நிலைக்கு எந்த உதவியும் செய்யப்போவதில்லை என்பதோடு இது செல்வம் படைத்தவர்களுக்கும் ஆபத்தே என்பதும் எனது கண்ணோட்டமாக இருக்கின்றது.

கட்டுரையின் விரிவு கருதி இத்துடன் இந்த கட்டுரையை முடித்துக் கொண்டு அடுத்த கட்டுரையில் தொழிளாலர்களுக்கு இந்த வியாபார முறை எப்படியெல்லாம் ஆபத்தாக அமைந்திருக்கின்றது என்பது சம்மந்தமாகவும், மேலும் வியாபாரம் எதனை அடிப்படையாகக்கொண்டு செயல்படுத்தப்பட வேண்டும் என்பதையும் இறைவன் நாடினால் விளக்குகின்றேன்.

 நன்றி:

அ.சதாம் உசேன் ஹஸனி

சனி, 25 செப்டம்பர், 2021

மனிதனின் மனஅமைதி எங்கே இருக்கின்றது?

ஒரு விவசாயி பக்கத்தில் உள்ள காட்டில் சென்று மரம் வெட்டிவந்து அதனை விற்று தன் வாழ்வை கழித்து வந்தான்.இப்படி ஒவ்வொரு நாளும் அவன் அக்காட்டு வழியாக கடந்து செல்லும்போது ஒரு மரத்தடியின் கீழ் ஒரு துறவி ஆழ்ந்த தியானத்தில் இருப்பதையும் பார்த்துக்கொண்டே கடந்துசென்றான். ஒரு நாள் தன் வாழ்வில் எதுவுமற்ற வெறுட்சியை உணர்ந்த விவசாயி அத்துறவியிடம் தன் வாழ்கையில் செல்வம் பெற்றவனாக ஆவதற்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்கலாமே என்று யோசித்துக்கொண்டு அத்துறவியை நெருங்கினான்.

தியானத்தில் இருந்த துறவியை மெல்லிய குரலில் அழைத்து ஐயா நான் வாழ்வில் செல்வம் பெற்று உயர்வாக வாழ ஏதேனும் வழி உண்டா என்றான். கண்களை மெல்லமாக திறந்த துறவி இதோ இந்த பக்கமாக மரங்களை பார்த்துக்கொண்டே நடந்துசெல் என்றார்.உடனே அவ்விவசாயியும் துறவியின் பேச்சை தட்டக்கூடாது என்பதற்காகவே மரங்களை பார்த்துக்கொண்டே தூரமாக நடக்க ஆரம்பித்தான்.

நீண்ட தூரம் கடந்த பின்பு சந்தன மரங்கள் நிறைந்த ஒரு காட்டை அடைந்தான்.இதற்கு முன்பு அக்காட்டில் பலமுறை கடந்து வந்திருந்தாலும் இதனை கவனிக்கவில்லையே என்று வருந்திக்கொண்டே அம்மரங்களை வெட்டிவீழ்த்தினான்.பிறகு அதனை விற்று அவனுடைய ஊரிலேயே மிகப்பெரும் செல்வந்தனானான்.சிறிது காலம் தான்அனுபவிக்காத அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்தான்.பிறகு அனைத்தும் சலித்துப்போனது. அதைவிட பெரும் செல்வந்தனாக ஆக வேண்டும் என்று விரும்பினான்.எனவே மீண்டும் அத்துறவியை சந்திக்கச்சென்றான்.எப்பொழுதும்போல் துறவி அம்மரத்தடியில் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.

விவசாயியோ ஐயா என் வாழ்வில் இதைவிட பெரிய செல்வந்தனாக ஏதேனும் வழி உண்டா என்றான்.மீண்டும் துறவி மெல்லமாக கண்களை திறந்து இதோ இவ்வழியாக கீழே பார்த்துக்கொண்டே செல் என்றார்.அவனும் கேட்ட மாத்திரத்திலேயே கீழே பார்த்துக்கொண்டு நடக்க ஆரம்பித்துவிட்டான்.நீண்ட தூரம் கடந்த பிறகு ஒரு சிறிய குகையை அடைந்தான். அங்குள்ள பாறைகள் முழுவதும் தங்கத்தால் மின்னியது.அட இத்தனை நாள் இந்த காட்டை சுற்றிவருகின்றேன் இது தெறியாமல் போய்விட்டதே என்று எண்ணிக்கொண்டு அத்தங்கங்களை கட்டியாக்க முற்பட்டான்.பிறகு அதனை விற்று மிகப்பெரும் கோடீஸ்வரனாக ஆகிவிட்டான்.

சிறிது காலம் தன் மனதில் புதைந்து கிடந்த அனைத்து அபிலாஷைகளையும் நிறைவேற்றிக்கொண்டான்.பிறகு முன்பைப்போல் மீண்டும் மனதில் வெறுட்சி தோன்ற ஆரம்பித்தது.அனைத்திலும் சலிப்பு ஏற்பட்டது.எனவே எப்பொழுதும் போல் அத்துறவியின் நினைவு வந்தது.துறவியை நோக்கி நடக்கலானான். துறவியும் எப்பொழுதும்போல் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.விவசாயியோ மெல்லமாக துறவியின் அருகில் சென்று ஐயா இப்பொழுது இருப்பதைவிட இன்னும் மிகப்பெரிய செல்வந்தனாக நான் ஆவதற்கு ஏதேனும் வழியிருக்கின்றதா என்றான்.

மெல்லமாக கண்களை திறந்த துறவி இதோ இந்த ஆற்றின் ஓரமாகவே நடந்து செல் என்றார்.உடனே விவசாயி விருவிருவென நடக்கத் தொடங்கினான். நீண்ட தூரம் கடந்த பின்பு அந்த ஆற்றின் ஓரத்தில் சில வைரவைடூரிய கற்கள் கிடப்பதை பார்த்தான்.அட என்ன ஆச்சர்யம் இந்த கற்களை நான் வாழ்நாட்கலிலேயே அணிந்ததில்லையே என்று எண்ணிக்கொண்டு அவற்றை பொறுக்கி எடுத்துக்கொண்டான்.அவற்றில் சிலவற்றை அணிந்து கொண்டு மீதியை மிகப்பெரும் தொகைக்கு விற்றான்.

சிறிது காலம் எல்லா சுகங்களையும் அனுபவித்தான்.ஆனால் இயற்கை அவனை திரும்பவும் இயல்பு நிலைக்கு அழைத்தது.எல்லா வசதிகள் இருந்தும் மனதில் ஏதோ ஒரு வெறுட்சி துரத்துவதை உணர்ந்தான்.சரி மீண்டும் துறவியிடம் செல்வோம் என்று யோசித்தபோது அவனுடைய மனதில் இப்படி ஒரு எண்ணமும் தோன்றியது.அதாவது வைர முத்துக்கள் மற்றும் தங்க சுரங்கம் மற்றும் சந்தனக்காடு இவை எல்லாம் இருக்கும் இடங்கள் அனைத்தையும் தெரிந்தும் இந்த துறவி ஏன் அவற்றை எடுத்து அனுபவிக்காமல் இருந்தார் என்று யோசிக்க ஆரம்பித்தான்.

தலையே சுற்றியது.சரி கட்டாயம் இதனை துறவியிடம் கேட்டால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் என்பதை உணர்ந்த விவசாயி துறவியை நோக்கி நடந்தான்.துறவி எப்பொழுதும்போல் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.அங்கு வந்த விவசாயியோ துறவியை மெல்லிய குரலில் அழைத்து ஐயா இன்று நான் உங்களிடம் ஒரு விளக்கம் கேட்டுச்செல்ல வந்திருக்கின்றேன் என்றான். துறவியும் கண்களை விழித்து, கேள்! என்றார்.ஐயா நீங்கள் ஏன் சந்தனக் காடுகளையும் தங்க சுரங்கத்தையும் வைர முத்துக்களையும் உங்களுக்காக எடுத்துக்கொள்ளவில்லை என்பதே எனது கேள்வியாகும் என்றான் விவசாயி.

அதற்கு துறவியோ புன்னகைத்துக்கொண்டே "நான் அதனைவிடவும் மேலான "மன அமைதியை" அடைந்துவிட்டேன்."எனவே நீ உயர்வாக பார்க்கும் அப்பொருட்கள் எனக்கு எத்தேவையுமற்றது என்றார் துறவி.துறவியின் பதிலை கேட்ட மாத்திரமே விவாசாயி அவருடைய கரங்களை பற்றிக்கொண்டு ஐயா எனக்கும் அந்த மனஅமைதியை தரும் வழியை கற்றுக்கொடுங்கள் என்று மன்றாடினான்.அப்பொழுது துறவியும் அதனை அவனுக்கு கற்றுக் கொடுக்க ஒப்புக்கொண்டார்.!

நீதி:

  • இந்த உலகில் மன அமைதியை விட விலை உயர்ந்தது வேறொன்றுமில்லை.
  • இந்த உலகில் அனைத்தும் ஒரு கட்டத்தில் சலிப்பை தந்துவிடுவதே.
  • அடையும் வரைக்கும்தான் செல்வம் சுகமானது.
  • மன அமைதி என்பது பாதுகாக்கப்பட வேண்டியது.
  • மன அமைதி என்பது ஆழ்ந்த அமைதியால் பெறப்படக் கூடிய அற்புத நிலை.

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

சாதனைகளெனும் ஏமாற்று வித்தை

முன்னுரை:

இன்றைக்கு குழந்தைகளுக்கும் சரி வாலிபர்களுக்கும் சரி சாதனை என்பதாக பெரியவர்கள் சொல்லிக்கொடுப்பது மூன்றே மூன்று விஷயங்கள்தான் என்பதாகவே நான் காண்கின்றேன்.அவற்றைத்தவிர்த்து இந்த உலகில் மனிதன் பெரிதாக சாதிப்பதற்கு வேறொன்றுமில்லை என்பதைப்போன்ற கட்டமைப்பையே இந்த உலகம் உறுவாக்கி வைத்திருப்பதாக என்னால் காணமுடிகின்றது.அந்த மூன்றும் என்ன என்பதையும் அவற்றின் உண்மைத்தன்மை என்ன என்பதையும் விளக்குவதே எனது இந்த கட்டுரையின் நோக்கமாக கொண்டுள்ளேன்.வாருங்கள் அவற்றைப்பார்த்துவிடுவோம்.

அவைகள்:

முதலாவது : செல்வம் சேர்ப்பது.

இரண்டாவது:பிரபல்யமாவது:

மூன்றாவது:அதிகாரத்தில் அமர்வது:

1.செல்வம் சேர்ப்பது சாதனையா?

செல்வம் சேர்ப்பதை இன்றைய மனிதர்கள் மகத்தான சாதனை என்று எல்லா சமயயங்களிலும் வலியுறுத்துவதை பார்க்கமுடிகின்றது.எனவே செல்வம் உடையவர்களையே இந்த உலகிற்கு சிறந்த முன்னோடிகளாக வரும் கால சமூகத்திற்கு முன்வைக்கப்படுகின்றது.உண்மையில் என்னைப் பொறுத்த மட்டில் இது மிகப்பெரும் ஏமாற்று வித்தையாகவே கருதுகின்றேன்.

ஏனெனில் மனிதனின் தேவைகளில் ஒன்றான இந்த உலக செல்வம் என்பது மனிதனுக்கு அவசியம்தான் என்றாலும் அதனை காகித செல்வமாகவும் பொருள் செல்வமாகவும் மாற்றி அவைகள் அனைத்தையும் எவன் அடைந்துகொள்வானோ அவன்தான் மிகச்சிறந்தவன் என்று கூறி அவன் இந்த உலகில் ரசிக்க வேண்டிய அனைத்தையும் பிடிங்கிக்கொண்டு உலகம் தனக்குத்தேவையான அத்துனை காரியங்களையும் நிறைவேற்றிக்கொள்வதே இன்றைய பொருளாதார அமைப்பின் அடிப்படை நோக்கமாக நான் காண்கின்றேன்.

இங்கு நான் ஏதோ தமிப்பட்ட ஆன்மிகத்தையோ அல்லது துறவறத்தையோ வலியுறுத்த விரும்புவதாக தயவுகூர்ந்து எண்ணிவிடாதீர்கள்.ஏனெனில் அதுவும் இதுபோன்றே வேறுவிதமான மனித சுரண்டலுக்கு ஆளாக்கும் முக்கியமான ஒன்றுதான் எனபதிலும் எனக்கு மாற்றுக்கருத்தில்லை என்றாலும் இங்கு நான் குறிப்பிட விரும்புவது இந்த உலகில் வியாபார நோக்கோடு உறுவாக்கப்பட்ட அத்துனை செல்வத்தையும் அடைவதுதான் ஒரு மனிதனின் மகத்தான நிலை என்றும் மெலும் அதுதான் அவன் வாழ்வின் மிகப்பெரும் சாதனை என்றும் சித்தரிக்கத் துடிப்பது மிகப்பெரும் ஏமாற்று வித்தை என்பதை இங்கு புரிந்து கொள்ளும்படி சுட்டிக்காட்டவே விரும்புகின்றேன்.

எனவே இந்த உலகில் மனிதர்கள் வியாபார நோக்கோடு உறுவாக்கிய அல்லது சுய நலனிற்காக மட்டும் உறுவாக்கிய பொருட் செல்வங்களையோ அல்லது பணக்காகிதங்களையோ ஒருவன் அதிகம் அடைந்துவிட்டான் என்பதற்காக அவன் சாதனையாளனாக பார்க்கப்படுவது என்பது என்னைப் பொறுத்தமட்டில் மகத்தான ஏமாற்றாகும்.இன்னும் சொல்லப்போனால் அவன்தான் இந்த உலகின் மிகச்சிறந்த அடிமை என்பதையும் இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

என்னுடைய இந்த கருத்தில் உங்களுக்கு நிச்சயம் உடன்பாடு இல்லாமல் போகலாம்.அல்லது பொருட்களும் பணக்காகிதமும் மட்டுமே உலகம் என்று உறுவாக்கப்பட்ட இன்றைய பொருளாதார அமைப்பின் ஆதிக்கம் உங்கள் கண்களை மறைக்கலாம்.ஆனால் மனிதனை இயந்திரத்தனமாகவும் அடிமையாகவும் மாற்றுவதற்கான கருவியே இந்த உலகமயமாக்கப்பட்ட பொருட் செல்வங்கள்தான் என்பதை பொருளாதாரத்தின் அடிப்படைவிதிகளே விளக்குவதை காணும்பொழுது இதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதைப்பற்றி நான் கவலைபடப்போவதில்லை.

இன்றைய பொருளாதர கோட்பாடே மனிதனை மனிதனாக வாழவிடாமல் அவனை பல்வேறு கட்டாயத்திற்குள் அடிமைப்படுத்தும் மிகப்பெரும் சதி என்பதே எனது தெளிவான கண்ணோட்டமாக நான் கருதுகின்றேன்.எனவே மிகப்பெரும் செல்வம சேர்ப்பது என்பது ஒருபோதும் பெரும் சாதனையாக பார்க்கப்பட முடியாது என்பதே எனது தீர்க்கமான முடிவாக இருக்கின்றது என்பதை வெளிப்படையாகவே இங்கு நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

யாரெல்லாம் செல்வம் சேர்ப்பதை மட்டும் நோக்கமாக கொண்டு ஓடுகின்றார்களோ அவர்களுக்கு அது ஒரு வேளை சிற்றின்பம் அல்லது மனமகிழ்வை கொடுத்தாலும் உண்மையில் அது இந்த உலகில் அவர்கள் அடைந்துவிட்ட மகத்தான சாதனையாக பார்க்க எவ்வித தகுதியுமற்றதே என்பதை சுட்டிக்காண்பித்துக்கொண்டு அடுத்தபடியாக பிரபல்யமாவது இந்த உலகின் மகத்தான சாதனையா? என்பது சம்மந்தமாக பார்ப்போம் வாருங்கள்.!


2.பிரபல்யமாவது சாதனையா?

இன்றைக்கு எல்லோரும் தன்னை இந்த உலகமே நேசிக்க வேண்டும் என்றோ அல்லது இந்த உலகமே தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ அல்லது இந்த உலகமே தன்னை பாராட்ட வேண்டும் என்றோ ஆசிக்கும் நிலை பரவலாகிவிட்டது.பிற மனிதர்களின் அங்கிகாரத்தை பெற வேண்டும் என்பதற்காகவும் அல்லது அவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காகவுமே மட்டும் இங்கு பலரும் மஹா யுத்தமே புரிகின்றனர் என்றாலும் அது மிகையாகாது.

ஆம்...!

மக்களிடம் பிரபல்யம் ஆவது என்பது ஒரு பெரும் சாதனை என்பதாக தனக்குத்தானே எண்ணிக்கொண்டு இங்கு செயல்படும் மனிதர்களின் அட்டகாசம் சொல்லிலடங்காதது என்றே நான் கருதுகின்றேன்.தங்களையும் தங்களின் வாழ்வையும் மறந்துவிட்ட அம்மனிதர்கள் மக்கள் என்ன ஆடை அணிந்தாள் விரும்புவார்கள் என்றும் என்ன பேசினால் விரும்புவார்கள் என்றும் என்ன காட்டினால் விரும்புவார்கள் என்றும் அங்குளம் அங்குளமாக தரவுகள் தயாரித்து வைத்துக்கொண்டு அதற்கு தக்கவாறு தங்களையும் வெளிக்காட்டுவதின் மூலம் மக்களிற்கு மிக பிடித்தமானவர்களாக ஆவதற்கு போராடி வருகின்றனர்.

மேலும் சிலசமயங்களில் அவர்கள் தங்களின் குறூற கருத்தாக்கங்களான போதை பொருள் பாவித்தல் மற்றும் பெண்களை ஆபாசமாக சித்தரித்தல் மற்றும் கொலை கொள்ளையை ஊக்குவித்தல் மற்றும் சமூக வெறுப்பை தூண்டுதல் போன்ற மானக்கேடான செயல்களையும் பரப்புவதற்கு இந்த பிரபல்யத்தையே பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பதும் நிதர்சனமான உண்மையாகும்.

மேலும் இன்றைய பிரபல்யங்களில் பெரும்பாலானோர் மக்கள் தங்களின் காட்சியை பார்த்துவிட்டாலே போதுமானது அது தன் சாதனைக்கான அங்கிகாரம் என்பதாக தவறாகவும் எண்ணிக்கொள்கின்றனர்.ஆனால் மக்கள் பிரபலங்களை பார்க்கின்றார்கள்,ரசிக்கின்றார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அவர்கள் வெறும் பிரபல்யத்தை மட்டும் ஒருவரின் உயர் சாதனையாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பதே நிதர்சனமாகும்.

ஏனெனில் இந்த உலகில் யானைகள்,நாய்கள்,ஓநாய்களும் கூட காட்சிபடுத்தப்படுவதால் மிக பிரபல்யமாகிவிடுகின்றது என்பதை அவர்கள் நன்றாக அறிந்து வைத்திருக்கின்றனர்.எனவே பிரபல்யம் என்பது ஒரு பெரும் சாதனை என்பது ஒரு போலியான ஏமாற்று வித்தை என்பதாகவே நான் கூற விரும்புகின்றேன்.இத்தகைய வித்தையை வியாபார நோக்கோடு சில தொலைக்காட்சி நிறுவனங்கள் ஊக்குவிக்குகின்றதே தவிர மற்றபடி மக்கள் பிரபல்யங்களை கொண்டாடுகிறார்கள் என்பது பொய்யான பிம்பமேயாகும்.

இங்கு ஒரு முக்கியமான அடிப்படையையும் விளக்கிவிட விரும்புகின்றேன். அதாவது மக்களுக்கு பெரிதும் உபயோகப்படும் காரியங்களை மக்களிடம் ஊக்குவிப்பதற்காக பிரபல்யப்படுத்தவேண்டியது கட்டாயம்தான் என்றாலும் இன்று தங்களை பிரபல்யப்படுத்திக்கொள்வதற்கே சில நற்காரியங்களை செய்து மக்களிடம் அங்கிகாரமும் பாராட்டும் தேடும் நிலை முன்பில்லாததை விட இப்பொழுது மிகவும் அதிகரித்துவிட்டது என்பதாகவே நான் கருதுகின்றேன்.

இதற்கு மிகப்பெரும் சான்றாக இன்றைக்கு வியாபார நோக்கம்கொண்ட சில சுய விளம்பர விரும்பிகள் தங்களின் சுயநலனுக்காக இத்தகைய செயலில் ஈடுபட்டு வருவதையும்,மேலும் அவர்கள் தங்களை இந்த உலகிற்கு பெரும் சாதனையாளர்களாக காட்டிக்கொள்வதையும் கண் ஊடாக காணமுடிகின்றது.ஆகவே அண்பர்களே நீங்கள் உங்களையோ அல்லது உங்களுடைய செயலையோ வெறும் மக்களின் அங்கிகாரத்திற்காவோ அல்லது பாராட்டிற்காகவோ மட்டும் விரும்பி பிரபல்யப்படுத்த விரும்பினால் அதைவிட மிக அறிவீனம் வேறொன்றுமில்லை என்பதை நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள்.ஏனெனில் அது ஒரு ஏமாற்று வித்தைதானே தவிர வேறொன்றுமில்லை.மேலும் அது உங்கள் வாழ்வில் பிரயோஜனங்களை இழுத்து வருவதைவிட நிறைய பிரச்சனைகளையே கொண்டு வரும் என்பதையும் ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.எனவே என்னைப் பொறுத்தமட்டில் பிரபல்யம் என்பது சாதனை என்பதை தாண்டி அது ஒரு பெரும் சோதனை என்பதாகவே கருதுகின்றேன். 


3.அதிகாரத்தில் அமர்வது சாதனையா?

உலகில் ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மீது அதிகாரம் செலுத்துவதற்கு பாடுபட்டதைபோல் அவனுடைய முன்னேற்றத்திற்காக பாடுபட்டிருந்தால் இந்த மனிதசமூகம் இரண்டாயிரம் ஆண்டிற்கான முன்னேற்றத்தை இன்றே பெற்று இருக்கும் என்றே நான் கருதுகின்றேன்.அந்தளவிற்கு இந்த மனித சமூகத்தின் வாழ்வு அடக்குமுறைகளாளும் அதிகார வெறியாலும் கபலிகரம் செய்யப்பட்டு இருக்கின்றது என்பதையே வரலாற்றில் நம்மால் காணமுடிகின்றது.

ஆம்....!

குடும்பத்தில் யார் தலைவராக இருந்து முடிவெடுப்பது என்பதில் தொடங்கி பணி செய்யும் வேலை இடங்களை கடந்து அரசு ஆட்சி வரை அத்தனையிலும் அதிகார வெறி அன்றிலிருந்து இன்றுவரை கோரத்தாண்டவம் ஆடுவதையும் அதை பெறுவதற்காக மனிதர்கள் போடும் நாடகங்களையும்,ஜாலங்களையும் காணும் போழுது அதிகாரத்தில் அமர்வதுதான் மாபெரும் சாதனை என்றே நம்மில் பலரும் எண்ணலாம்.

ஆனால் உண்மை அதுவல்ல..!

மனிதர்களை அச்சுறுத்தி அடக்கியாளுவதற்கு மட்டுமான  அதிகாரம் இந்த மனித சமூகத்திற்கான சாபம் என்பதாகவே நான் கருதுகின்றேன்.இன்றைய குழந்தைகளுக்கும் வாலிபர்களுக்கும் போலியான மதிப்பை சம்பாரித்து தரும் அடக்குமுறைக்குட்பட்ட அதிகாரத்தில் அமர்வது தான் சாதனை என்பதாக ஊக்குவிப்பது இந்த மனித இனத்தை மீட்ட முடியாத இழப்பில் தள்ளிவிடுவதைப் போன்றே என்றே நான் கருதுகின்றேன்.

ஏனெனில் மக்களை அடக்கி ஆட்சி செய்யும் ஒரு அவளமானநிலை எப்படி ஒரு சிறந்த சாதனையாக போற்றப்பட முடியும் என்பதே எனது கேள்வியாகும்?அவ்வாறே மக்களின் கஷ்ட நஷ்டங்களில் பங்கெடுத்து தன்னை உண்மையாக அற்பனிக்கும் ஒருவனுக்கு முன்னால் இத்தகைய போலியான அதிகாரத்தால் மக்களை அடக்கியாள துடிப்பவன் எப்படி சாதனையாளனாக பார்க்கப்படமுடியும்??அங்கு தான் அதிகாரவர்க்கங்களின் கோர முகம் ஒழிந்திருப்பதாக நான் கருதுகின்றேன்.
ஆம்..!

இந்த மனித சமூகத்தை அடக்கியாள்பவர்களே மக்களில் உயர்ந்தவர்கள் என்றும் சாதனையாளர்கள் என்றும் மரியாதைக்குறியவர்கள் என்றும் ஒரு போலிபிம்பத்தை மக்களை அடக்கியாளத்துடிக்கும் அதிகாரவர்க்கத்தினர் சமூகத்தில் மிக ஆழமாக தோற்றுவித்துவிட்டனர்.இன்னும் சொல்லப்போனால் அதிகாரத்தை வழங்கிய அந்த மக்களே அவர்களை வியந்து காணும் அளவிற்கு அதிகார பீடத்தை போலி மரியாதைகளாலும் சுகபோகங்களாலும் பிரம்மாண்டமாக அலங்கரித்து ஒரு ஏமாற்று வித்தையை உறுவாக்கிவிட்டனர்.

அதுவே இன்று மக்களில் பெரும்பாலோர் அதிகாரத்தில் அமர்வதுதான் சாதனை என்று எண்ணுவதற்கான அடிப்படை காரணியாகவும் அமைந்துவிட்டது என்பதாகவே நான் கருதுகின்றேன்.எனவே என்னைப் பொறுத்தமட்டில் அதிகாரத்தில் அமர்வது என்பது ஒருபோதும் சாதனையல்ல. மாறாக அது வெறுமனே அதிகாரம் செலுத்துவதற்கான இடமாக மட்டும் இருந்தால் அது மக்களுக்கும் அனைவருக்கும் சாபமே என்றே நான் கருதுகின்றேன்.

இங்கு ஒரு முக்கிய அடிப்படையையும் விளக்கவிரும்புகின்றேன்.அதாவது ஆட்சி அதிகாரம் செலுத்தும் இடமானது மக்களின் கஷ்டநஷ்டங்களில் பங்கெடுக்கும் ஒரு பொறுப்பு நிறைந்த இடம் என்பதாக அது பார்க்கப்பட வேண்டுமே தவிர அது தனி மனித புகழைத்தேடும் சாதனைக்கான இடமல்ல என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.எனவே யார் அதில் அமர்ந்து உண்மையிலேயே மக்களின் கஷ்டநஷ்டங்களில் பங்கெடுத்து உதவி புரிகின்றார்களோ அவர்கள் மக்களால் சிறப்பு மிக்கவர்களாக போற்றப்படுவது எனபது வரவேற்கதக்கதேயாகும்.

ஆனால் இவற்றிற்கு மாறாக வெறுமனே அதிகாரத்தில் அமர்வதை மட்டும் சாதனையாக ஊக்குவிப்பது என்பது இந்த மனித சமூகத்தை இன்னும் இரட்டிப்பான அடக்குமுறைக்கு வழிவகுக்குமே தவிர எவ்வித மனித முன்னேற்றத்தையும் தந்துவிடாது என்பதே எனது கருத்தாகும்.


முடிவுரை:

இந்த உலகில் மனிதர்கள் தங்கள் செயலை ஆக்கப்பூர்வமாக மென்மேலும் செயல்படுத்துவதற்காக ஊக்குவிக்கப்படுவது என்பது ஒரு சிறந்த செயல்தான் என்றாலும் இன்று சாதனை என்ற பெயரில் சுயலாபத்தை மட்டும் நோக்கமாக கொண்ட சிலர் தங்களின் சுயலாபத்திற்காக மட்டும் மனிதர்களை கண்கட்டிய குதிரைகளாக உறுவாக்க விரும்புகின்றனர் என்பதை சுட்டிக்காட்டவே இந்த கட்டுரையை தொகுத்தேன்.

மேலும் இன்று சாதனைகளாக போற்றப்படும் பல்வேறு விஷயங்கள் வெறும் சுயலாபத்திற்கான ஏமாற்று வித்தைகளே என்பதையும் தோலுறித்துக்காட்ட வேண்டும் என்றும் விரும்பினேன்.ஆக வாலிப அண்பர்கள் தங்களின் விலைமதிப்பற்ற ஆற்றலை போலியான சாதனை போதைக்கு அடிமையாக்கிவிடக்கூடாது என்பதே எனது இந்த கட்டுரையின் முக்கிய  நோக்கமாகவும் கொண்டிருக்கின்றேன்.எனவே இதனை முடிந்தளவு என்னுடைய கண்ணோட்டத்தில் நின்று புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.நிச்சயம் இது உங்களுக்கு பயனலிக்கும் என்றே நான் கருதுகின்றேன்..!

(அடுத்த கட்டுரையில் எது சாதனை?என்பதை இறைவன் நாடினால் விளக்குகின்றேன்.)

நன்றி:

புதன், 22 செப்டம்பர், 2021

உங்கள் மனம் தேவையற்ற தீர்மானம் செய்கிறதா?

முன்னுரை:

இன்றைக்கு மனிதர்களிடம் காணப்படும் குணங்களிலேயே மிக ஆபத்தான குணம் தேவையற்ற தீர்மானம் செய்வதுதான் என்றே நான் கருதுகின்றேன். எந்த அவசியமும் இல்லாத இடங்களிலும் கூட மனிதர்களில் பெரும் பாலானோர் தேவையற்ற தீர்மானங்களை தேடுவதையும், அதில் ஈடுபடுவதையும் காணும்பொழுது எனக்கு மிக பரிதாபமாகவே உள்ளது. அத்தகைய நிலையைக்கொண்ட மூன்று ஜென் துறவிகளின் ஒரு நிகழ்வை இங்கு நான் குறிப்பிட்டுக்காட்ட விரும்புகின்றேன்.அது நிச்சயம் நம் போன்ற தேவையற்ற தீர்மானங்களை தேடும் மனிதர்களுக்கு மிக பிரயோஜனம் மிக்கதாக இருக்கும் என்றும் நம்புகின்றேன்.

"மூன்று ஜென் துறவிகள் காலை பொழுதில் எப்பொழுதும் போல் நடை பயிற்சிக்காக அருகில் உள்ள காட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கின்றனர்.அப்பொழுது எதார்த்தமாக அந்த காட்டில் இருந்த மலை உச்சியில் தங்கள் முந்தைய ஆசிரியரான ஒரு ஜென் துறவி நிற்பதை மூவரும் காண்கின்றனர்.அவரை கண்டவுடனே மூவரில் ஒருவர் நம் ஆசிரியர் யாரையோ எதிர்பார்த்து நிற்பதை போன்று தெரிகின்றதே என்றார்.
அதனைக்கேட்ட மற்றொருவர் இல்லை!இல்லை.!அவர் எதோ ஒன்றை தொலைத்துவிட்டு மலையின் உச்சியில் நின்று தேடுகின்றார் என்றே நான் நினைக்கின்றேன் என்றார்.

அதனைக் கேட்ட மூன்றாமவரோ இல்லை!இல்லை..!அவர் அங்கு நின்று தியானம் செய்துகொண்டிருக்கின்றார்.ஏனெனில் அவரிடம் எந்த அசைவும் காணப்படவில்லை என்று கூறி முடித்தார்..!இப்பொழுது மூவருக்கும் தங்கள் ஆசிரியர் என்ன செய்துகொண்டிருக்கின்றார் என்பதில் கருத்து வேறுபாடு முத்தியது.வேறு வழியே இன்றி இப்பொழுது ஆசிரியரையே நேராக சென்று சந்தித்து பிரச்சசனையை தீர்ப்பதாக முடிவு செய்யப்பட்டது.

தாங்கள் எதற்கு வந்தார்களோ அவற்றை எல்லாம் மறந்துவிட்டு,மலை உச்சிக்கு சென்றால் தாங்கள் செய்ய வேண்டிய அடுத்த வேலைகளெல்லாம் நின்றுபோகும் என்பதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு சிரமத்தோடு மலை உச்சியை அடைந்தார்கள்.அப்பொழுது அரை கண்ணை மட்டும் திறந்த நிலையில் ஆசிரியர் நின்று கொண்டிருப்பதைக்கண்டனர்.ஆனாலும் முதலாமவருக்கோ தன் கருத்துதான் சரி என்று நிறூபிக்கப்பட வேண்டும் என்ற பேராவல் இருந்ததால் அவர் மெல்லமாக ஆசிரியரை அழைத்தார். ஆசிரியரும் என்ன கூறுங்கள் என்றார்.அதற்கு முதலாமவர் ஐயா நீங்கள் இங்கு யாரையோ தேடி வந்திருக்கின்றீர்கள் அப்படித்தானே என்றார்.

அதற்கு துறவியோ எனக்கு இந்த உலகில் யாரும் இல்லையே நான் யாரை தேடப்போகின்றேன் நான் தனியாகவே இந்த உலகிற்கு வந்தேன் தனியாகவே போவேன் என்பதை நான் நன்றாக அறிவேன் எனவே இங்கு நான் யாரையும் தேடவேண்டிய அவசியமில்லையே என்றார்.அதனைக்கேட்ட இரண்டாமவர் தன்னுடைய முடிவுதான் சரியானது என்று எண்ணிக்கொண்டு அப்படியானால் நீங்கள் உங்களுடைய கால் நடைகளில் ஏதோ ஒன்றை தொலைத்து விட்டு மேலிருந்து தேடுகின்றீர்கள் அப்படித்தானே என்றார்.

அதற்கும் துறவி இங்கு என்னுடைய பொருள் என்று எதுவுமே இல்லை என்றிருக்கும் பொழுது நான் எப்படி என்னை விட்டும் தொலைந்த பொருளை தேடுவேன்?எனவே நான் எந்த பொருளையும் தேடவில்லை என்று பதிலளித்தார்.பிறகு மூன்றாமவருக்கோ மிக்கமகிழ்ச்சி ஏனென்றால் ஆசிரியர் தியானத்தில் இருப்பதாக தான் கருதியதுதான் உண்மை என்று எண்ணிக்கொண்டு "அப்படியானால் நீங்கள் இங்கு தியானம் செய்கின்றீகள்தானே என்றார்.

அதற்கு துறவியோ உனக்கு தெரியாதா?தியானம் என்பது எல்லா நிலையிலும் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம் என்று.அதனை நான் நம் மடத்திலேயே செய்துவிட்டேன்.இப்பொழுது நான் ஏதுமற்ற நிலையில் இருக்கின்றேன்.நான் யார் எனக்குள் என்னவெல்லாம் இருக்கின்றது என்பதையெல்லாம் மறந்து ஒரு காலிப்பாத்திரமாக இருக்கின்றேன்.இத்தகைய நிலைதான் புத்தர்களால் போற்றி புகழப்பட்ட நிலை.எனவே இது தியானமும் இல்லை என்றார்.மூவரின் முகமும் வாடிப்போனது.தங்களின் தேவையற்ற தீர்மானங்கள் அனைத்தும் பொய்யாய் போனதை உணர்ந்துகொண்டார்கள்.அப்பொழுது துறவியோ மக்களின் நிலையை முடிவு செய்வதை விடுத்துவிட்டு உங்கள் காரியங்களில் ஈடுபடுங்கள்.அதுதான் உங்களுக்கு தீர்க்கமான தீர்வை தருவதற்கு மிக உகந்தது என்று உபதேசித்து அவர்களை அனுப்பி வைத்தார்.

நீதி:

  • அடுத்தவர்களின் காரியத்தில் மூக்கை நுழைக்காதீர்கள்.
  • பிறரின் செயலுக்கு வடிவம் கொடுக்காதீர்கள்.
  • நிச்சயமற்ற ஒன்றிற்காக உங்கள் சக்தியை வீணடிக்காதீர்கள்.
  • தேவையற்ற இடங்களில் உங்கள் கருத்தை நிறூபிக்க விரும்பாதீர்கள்.
  • தேவையற்ற விஷயத்தை உங்கள் தோளில் சுமக்காதீர்கள்.
  • உங்கள் காரியத்தில் ஈடுபாட்டுடன் செயல்படுங்கள்.

திங்கள், 20 செப்டம்பர், 2021

வாழ்வில் முன்னேற வேண்டுமா?

வாழ்வில் முன்னேற வேண்டுமா
வாழ்வில் முன்னேற வேண்டுமா

முன்னுரை:

இந்த உலகில் வளர்ச்சிபெற்ற ஒரு நபராக ஆகவேண்டும் என்று விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்படும் இந்த நான்கு விதிகளையும் கடைபிடித்தால் நிச்சயம் தங்கள் வாழ்வில் முன்னேறிவிடமுடியும் என்று நம்புகின்றேன்.எனவே வாசிப்பதோடு மட்டும் நிறுத்திவிடாமல் கட்டாயம் கடைபிடித்து வாருங்கள் இது உங்களுக்கு மிக பிரயோஜனமிக்கதாக இருக்கலாம்.

முதல் விதி: 1.குறைவாக பேசுங்கள்.

நீங்கள் முன்னேற வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அதிகம் பேசுவதை நிறுத்தி அதிகம் செயல்படத்தொடங்கிவிடுங்கள்.இதனைத்தான் இங்கு குறைவாக பேசுவது என்று நான் குறிப்பிட விரும்புகின்றேன்.நம்மில் பலரும் பல்வேறு அற்புதத் திட்டங்கள் கொண்டவர்களாகவோ அல்லது அற்புத கருத்துக்கள் கொண்டவர்களாகவோ இருந்துவிடுகின்றோம்.ஆனால் அதனை செயல்படுத்துவதைவிட்டுவிட்டு அல்லது அதனை செயல்படுத்தும் வழியில் பொராடுவதை விட்டுவிட்டு சொற்காளால் மட்டுமே வெள்ளப்போவதாக கூறித்திறிவது மிக குறைமதியாளர்களின் பண்பாகவே நான் காண்கின்றேன்.

ஏனென்றால் முன்னேறிய மேன்மக்கள் தங்கள் திட்டங்களை கூறித்திரிவதை காட்டிலும் செயல்படத்தொடங்கிவிடுகின்றனர் என்பதே வரலாறு நமக்கு கற்றுத்தரும் முக்கிய பாடமாக இருக்கின்றது.எனவே நீங்கள் உங்கள் வாழ்வில் முன்னேற விரும்பினால் குறைவாக பேசுங்கள்.உங்கள் செயலையே உங்களுக்கான வெளிப்பாடாக ஆக்கிக்கொள்ளுங்கள்.

இரண்டாம் விதி: 2.அதிகம் கவனியுங்கள்:

இந்த உலகில் நீங்கள் கவனிக்காமல் எதுஒன்றையும் கற்றுவிட முடியாது என்பதையும் மேலும் உங்களால் கற்காமல் எதிலும் முன்னேற முடியாது என்பதையும் நீங்கள் உணராத வரை உங்களால் ஒருபோதும் முன்னேற முடியாது என்பதை உங்கள் ஆழ்மனதில் எப்படியாவது ஆழப்பதிய செய்துவிடுங்கள்.ஏனெனில் கூர்ந்து கவனித்தல் என்ற பன்பே உங்களை முன்னேற்றத்தின் அடுத்தபடிக்கு அழைத்துச்செல்லும் அற்புத பண்பாக இருக்கின்றது.அவ்வாறே யார் கவனித்தலை விட்டுவிடுகின்றார்களோ அவர்கள்தான் பெரும்பாலும் இந்த உலகில் பலநூறு நலவுகளைவிட்டும் தூரமாக்கப்பட்டும் விடுகின்றனர்.எனவே இந்த உலகில் ஒவ்வொன்றையும் கற்கும் ஆவலோடு உற்றுநோக்குங்கள்.நிச்சயம் உங்களை அது முன்னேற்றத்தின் உச்சிக்கு அழைத்துச் செல்லும்.

மூன்றாம் விதி:3.குறைவாக எதிர்வினையாற்றுங்கள்:

உங்களிடம் வரும் எல்லா பிரச்சனைகளுக்கும் உங்களுடைய எதிர்வினையை வெளிப்படுத்த வேண்டும் என்ற எந்த அவசியமுமில்லை என்பதை முதலில் உணர்ந்துகொள்ளுங்கள்.சிறிய சிறிய வியங்களுக்கெல்லாம் நீங்கள் உணர்ச்சி வயப்படக்கூடியவராக இருந்தால் நிச்சயம் உங்களால் முன்னேறவே முடியாது என்பதையும் நன்றாக நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள்.இந்த உலகம் போட்டி நிறைந்தது.எனவே அது உங்களின் உணர்வுகளை உங்களுக்கு எதிரான ஒரு பகடைக்காயாக பயன்படுத்தி உங்களை முன்னேறு வதிலிருந்தும் வெகு தூரத்தில் தள்ளிவிட முயற்சிக்கும்.அச்சமயங்களில் நீங்கள் எதிர்வினை ஆற்றுவதை தவிர்த்துவிட்டு நிதானத்தோடு செயல்படத் தொடங்கிவிடுவீர்களேயானால் நிச்சயம் உங்கள் வாழ்வில் நீங்கள் முன்னேறிவிடலாம்.

 நான்காம் விதி:4.அதிகம் உள்வாங்குங்கள்.

இந்த உலகை உற்று நோக்குவதின் மூலம் நாம் எந்தளவிற்கு உள்வாங்குகின்றோமோ அந்தளவிற்கு நம்மால் சிறப்பாக செயல்பட முடியும்.நம்மில் பலரும் அவசரக்காரர்களாகவும் அல்லது எல்லாம் தெரிந்தவர்களாகவும் நம்மை காட்டிக்கொள்ள விரும்புவதால் பெரும்பாலும் பல்வேறு விஷயங்களை நாம் உள்வாங்க தவறிவிடுகின்றோம்.ஆனால் யார் (Observe)உள்வாங்குதல் என்ற பண்பைக்கொண்டிருக்கின்றார்களோ அவர்கள் இந்த உலகில் மகத்தான விஷயங்களையும் வெளிக்கொண்டு வந்துவிடும் ஆற்றல் மிக்கவர்களாக திகழ்வது நிதர்சனமாக இருக்கின்றது.எனவே இந்த உலகை உங்களால் முடிந்தளவு உள்வாங்க கற்றுக்கொள்ளுங்கள்.ஏனெனில் உள்வாங்கும் பண்பே நிச்சயம் உங்களை உயரத்தில் நிறுத்தும்.!