முன்னுரை:
தமிழகத்தில் 2026-க்கான சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் -23 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் பல்வேறு கட்சிகளும் அதன் தலைவர்களும் வீதிகளில் இறங்கி பலநூறு தேர்தல் வாக்குறுதிகளையும், நம்பிக்கைகளையும் மக்களிடம் அள்ளிவீசிக்கொண்டிருக்கின்றார்கள். அவற்றில் குறிப்பாக மக்களுக்கு சலுகை செய்வதில் ஒருவர் மாதம் ஆயிரம் கொடுப்பதாக வாக்குறுதியளித்தால் மற்றொருவர் இரண்டாயிரம் என்கிறார்,மற்றொருவர் மூவாயிரம் என்கிறார்.இப்படி எங்களுடைய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கும் என்று மக்களை தங்களுக்கு வாக்களிக்கும்படி வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இவற்றிற்கு மத்தியில் மக்களாகிய நாம் இந்த தேர்தலில் மிகமுக்கியமாக எதற்காக உறுதி எடுக்க வேண்டும் என்பதையும்,தற்போதைய நிலையில் தமிழக மக்களுக்கு எது மிகமுக்கிய தேவை என்பதையும் மிக எளிய வடிவில் சுருக்கமாக இந்த கட்டுரையில் விவரித்திருக்கின்றேன்.நமக்கான அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்பே மக்களாகிய நாம் இதனை முடிவுசெய்ய கடமைபட்டுள்ளோம் என்பதை கருத்தில் கொண்டே தற்பொழுது இந்த கட்டுரையை தொகுத்துள்ளேன்.நிச்சயம் இக்கட்டுரை தற்போதைய தமிழகத்தின் சட்டமன்ற தேர்தல் சமயத்தில் வாக்களிக்கும் நண்ப, நண்பிகளுக்கு மிகவும் பிரயோஜனமிக்கதாக அமையும் என்றே நம்புகின்றேன்.எனவே இதனை அன்புத்தோழர்களும் வாசித்து ஏனைய தோழமைகளுக்கும் பகிர்ந்து பயன்பெறச்செய்யும்படி அன்போடு வேண்டிக்கொண்டு கட்டுரைக்குள் செல்கின்றேன்.முதலில் வாக்காளர்களாகிய நாம் மிகமுக்கியமாக உறுதியேற்க வேண்டிய இரு விஷயங்களைப்பற்றி பார்த்துவிடுவோம்.
1.100% வாக்களிப்போம் என்று உறுதியேற்போம்.
வருகின்ற சட்டமன்ற தேர்தளில் மக்களாகிய நாம் 100% நம்முடைய வாக்குகளை செலுத்துவதற்கு உறுதியேற்க வேண்டும் என்பதுதான் எனது முதல் வேண்டுகோளாகும்.ஏதோ என்னுடைய ஒரு ஓட்டுதானே இதனால் இந்த ஆட்சியில் என்ன மாற்றம் ஏற்பட்டுவிடப்போகின்றது என்ற அலட்சியத்தாலோ அல்லது வியாபாரம்,தொழில்,தூரம் போன்றவற்றை காரணம் காட்டியோ வாக்களிக்கும் விஷயத்தில் பொடுபோக்காக இருந்துவிடாதீர்கள்.மேலும் இந்த முறை தேர்தல் கோடை காலத்தில் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கின்றது என்பதற்காக வெயிலை காரணம் காட்டியும் ஓட்டுபோடாமல் இருந்துவிடாதீர்கள்.ஏனெனில் மேற்கூறிய சிறுகுறு அசௌகரியங்களை காரணம் காட்டி நம்மை ஆட்சி செய்யத்தகுதியான தலைவர்களை தேர்தல் நாளில் நம் ஓட்டின் மூலம் நல்ல தலைவர்களை தேர்தெடுக்கத்தவறினால் நிச்சயம் மீதமுள்ள ஐந்து வருடங்களும் அரசு அலுவலகங்களின் வாயிலிலோ அல்லது யாரோ ஒரு அரசியல்வாதியின் கால்களிலோ கழிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம் என்பதை ஒருபொழுதும் மறந்துவிட வேண்டாம் என்பதை பணிவோடு வேண்டிக்கொண்டு அடுத்தபடியாக மக்களாகிய நாம் மிக முக்கியமாக உறுதியேற்க வேண்டிய இரண்டாவது விஷயத்தைப்பற்றி பார்ப்போம் வாருங்கள்..!
2.நமக்கு என்ன தேவை என்பதை நாமே முடிவு செய்ய உறுதியேற்போம்.
இதுவரையிலும் மக்களுக்கு என்ன தேவை என்பதை அரசியல் தலைவர்கள்தான் முடிவு செய்தார்கள்.அதற்கேற்ப சில உயர்ந்த தலைவர்கள் மக்களின் துயரை துடைப்பதற்காக தானே முன்வந்து பல்வேறு நலத்திட்டங்களை தங்கள் மக்களுக்காக செய்தார்கள் என்பதும் நிதர்சனம்தான் என்றாலும் தற்போதைய நிலையில் மக்களின் விலைமதிப்பற்ற வாக்கை பெறுவதற்கு அவர்களின் அற்ப தேவைகளை நிறைவேற்றும் வண்ணமாக சொம்பு கொடுப்பது,சோப்பு டப்பா கொடுப்பது, வலையல் கொடுப்பது,போன்ற அற்ப செயல்களின் மூலம் நம்முடைய வாக்குரிமையை அசிங்கப்படுத்த பல்வேறு அரசியல்வாதிகளும் முற்படுகின்றார்கள்.அப்பாவி மக்களாகிய நமக்கு ஒரு ஓட்டின் மதிப்பு எங்கே தெரியப்போகின்றது என்பதாக கூறிக்கொண்டு ஏதாவது சில பொருட்களை தூக்கி எறிந்தால் அதனையும் வரிசையில் நின்று வாங்கிக்கொண்டு சென்றுவிடுவார்கள் என்ற மமதையில் திரிகின்றார்கள்.
எனவேதான் அரசியல்வாதிகள் எதை கொடுக்கின்றார்களோ அதனை வாங்கிக்கொண்டு செல்வதை விடுத்து இந்த அரசிடமிருந்து நமக்கு என்ன தேவை என்பதை வெளிப்படையாக கேட்பதற்கு உறுதியேற்க வேண்டும் என்கின்றேன்.அரசியல்வாதிகள் தங்களது கடைகளில் அல்லது தங்களது கம்பெனிகளில் ஓடாத அல்லது கமிஷனுக்கு பெற்றுவரப்பட்ட பாத்திரங்களை நம் தலையில் கட்டி நமக்கு தலைவனாக நினைத்தால் அதனை அப்படியே பல் இழித்துக்கொண்டு பெறாமல் எங்களுக்கு எது வேண்டுமோ அதனை செய்துகொடுங்கள் என்று தைரியமாக கேட்கவேண்டும் என்கின்றேன்.
எது எப்படியோ!இனியாவது மக்கள் தங்களுக்கு இந்த அரசிடமிருந்து என்ன தேவை என்பதை மக்களே முடிவு செய்ய உறுதியேற்கவேண்டும் என்பதை இங்கு பதிவு செய்துகொண்டு அடுத்தபடியாக தற்போதைய நிலையில் தமிழக மக்களுக்கு அப்படி என்னதான் மிகமுக்கிய தேவையிருக்கின்றது என்று அலசிப்பார்ப்போமேயானால் குறிப்பாக தமிழக மக்களுக்கு ஐந்து மிகமுக்கிய தேவைகள் இருப்பதாக என்னால் காணமுடிகின்றது.அவை ஒவ்வொன்றையும் வட்டுறுக்கமாக இங்கே பதிவுசெய்வது நம் ஒவ்வொருவருக்கும் மிக பிரயோஜனமிக்கதாக அமையும் என்றே நம்பி அவற்றை கீழே பதிவுசெய்கின்றேன்.ஒருவேலை உங்களுடைய கருத்து ஏதேனும் இருந்தால் அதனை என்னுடைய மின் அஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள் நிச்சயம் அதன் மூலம் நான் மிகவும் பயன்பெற்றுக்கொள்வேன்.
தற்போதைய நிலையில் தமிழக மக்களுக்கு என்ன தேவை?
1.தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்ப அட்டைதாரரின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் அரசு நிதி வழங்க வேண்டும்.
2026-யின் அறிக்கைப்படி தமிழகத்தில் கிட்டதட்ட 7.76 கோடி மக்கள் வசித்துவருகின்றார்கள்.இவர்களில் 9.42 லட்சம் நபர்கள் அரசு ஊழியர்களாக பணியாற்றி வருகின்றார்கள்.மேலும் 6.50 லட்சம் அரசு பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமல் காலியாகவும் உள்ளது.இந்நிலையில் ஏனைய தமிழக மக்களுக்கு அவர்களின் கல்வி,பொருளாதாரம் சார்ந்த நிலைகளை உயர்த்துவதற்கு அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏதேனும் ஒரு தொழில் தொடங்க போதுமான நிதி வழங்கி உதவி செய்ய வேண்டும் என்பதே தற்போதைய நிலையில் தமிழக மக்களுக்கு மிக முக்கிய முதல் தேவையாக இருக்கின்றது என்று நான் கருதுகின்றேன்.
ஓருவேலை ஏழை மாணவர்களுக்கு இலவச கல்வி,சீருடை,உணவு போன்ற பல்வேறு அத்தியாவசிய தேவைகளை தற்போதைய தமிழக அரசே செய்துவருகின்றது.அவை மட்டுமல்லாமல் மகளிர் உதவித் தொகையாக தற்போதைய திமுக அரசு 1000/-ரூபாயை அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கிவருகின்றது என்பதாக நீங்கள் கேட்டால்..!உண்மையில் தற்போதைய அரசின் மேற்கூறிய திட்டங்கள் மக்களுக்கு உதவியாகத்தான் இருக்கின்றது என்றாலும் அதனால் மக்களின் பொருளாதார நிலை இன்னும் வளர்ச்சியடையாமல் இருக்கின்றது என்பதையும் ஒரு எழுத்தாளனாக இங்கு பதிவுசெய்ய கடமைபட்டிருப்பதாக உணர்கின்றேன்.
மேலும் தற்போதைய விலைவாசி உயர்வோடு அரசு வழங்கும் 1000/- ரூபாயை ஒப்பிடுகையில் அது பெரும்பாலும் மக்களின் பொருளாதாரத்தை வளர்ப்பதற்கு உதவவேவில்லை என்பதையே நிதர்சனமாக காண்கின்றேன். இப்படி ஒவ்வொரு மாதமும் 1000/- ரூபாய் வழங்கி உதவுவதால் அரசிற்கு அதிகப்படியான செலவும் மக்களின் பொருளாதார நிலை அப்படியே இருக்கும் சூழலும்தான் ஏற்படுகின்றதே தவிர இவற்றால் தமிழக மக்களின் வாழ்வாதாரத்திலோ அல்லது பொருளாதாரத்திலோ எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.எனவே மக்களின் பொருளாதார முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்கள் தொழில் செய்யவோ அல்லது உற்பத்தி செய்யவோ அல்லது ஏற்றுமதி, இறக்குமதி செய்யவோ போதுமான குறைந்தபட்ச நிதியை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.
மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கி வருவது நிச்சயம் ஒரு உதவிதான் என்றாலும் அவ்வுதவியை விரிவுபடுத்தி தனிநபர் பொருளாதாரத்தையும் நாட்டின் கூட்டு பொருளாதாரத்தையும் வளர்க்க யார் வழிவகை செய்ய முன் வருகின்றார்களோ அவர்களுக்குத்தான் நம் ஓட்டு என்ற முடிவிற்கு மக்களாகிய நாம் வரவேண்டும் என்பதை பணிவன்போடு கேட்டுக்கொண்டு அடுத்தபடியாக தமிழக மக்களுக்கு இரண்டாவதாக மிகமுக்கிய தேவை என்ன என்பது குறித்த பகுதிக்கு செல்கின்றேன்.
2.தனியார் ஊழியர்களுக்கு பொருளாதார ரீதியில் போதுமான ஊதியம் வழங்க அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
இந்தியாவில் தொழிலார்கள் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஒருசில அடிப்படை உரிமைகளை தற்பொழுது பெற்றுவருகின்றார்கள் என்றாலும் இன்னும் அவர்களுக்கான ஊதியத்திலும் வேலைநேரத்திலும் பல்வேறு குழறுபடிகளை சந்தித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.அந்த வகையில் குறிப்பாக தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் உழைப்பாளர்களின் உழைப்பை சுரண்டும் வண்ணமாக ஆதிக்க மனோபாவம் கொண்ட முதலாளிகள் அடிப்படை ஊதியம்கூட வழங்குவதில்லை என்பதை அரசே முன்வந்து சரிசெய்ய வேண்டும்.ஏழை எளிய மக்கள் அன்றாட உணவிற்காகவும்,வாழ்வாதாரத்திற்காகவும் தங்களின் கால்களில் விழுந்துகிடந்துகொண்டே இருக்க வேண்டும் என்ற ஆதிக்க மனோபாவம் கொண்ட முதலாளிகளுக்கு எதிராக உழைப்பாளர்களுக்கு அவர்களின் உழைப்பிற்கேற்ற ஊதியம் வழங்குவதை அரசு சட்டம் இயற்றி பாதுகாக்கவேண்டும்.
முதலாளிகளின் வியாபாரத்தில் வருகின்ற லாபத்தின் கூட்டாளிகளாக திகழும் தொழிலாளர்களுக்கு சரிசமமான பங்கு இல்லையென்றாலும் தற்போதைய விலைவாசிகளை கருத்தில்கொண்டு அவர்களின் ஊதியம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே தமிழகத்தில் பல்வேறு தொழிலார் நலச்சங்கங்களின் வேண்டுகோளாக இருக்கின்றது.அவ்வாறு அரசு நீதமான ஒரு ஊதியத்தை நிர்ணயிக்கத் தவரினால் ஓரளவு நாகரீகத்தை நெருங்கிச்செல்லும் இந்த மனித சமூகம் திரும்பவும் கற்காலத்திற்கே இழுத்துச் செல்லப்படும் ஆபாயம் காத்திருப்பதாகவும் எச்சரிக்கின்றது.
எனவே தனியார் நிறுவனங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களின் அடிப்படை தேவைகளை முழுமையாக நிறைவேற்றிக்கொள்ளும் அளவிற்கான குறிப்பிட்ட ஊதியத்தை அரசே நிர்ணயம் செய்து சட்டம் இயற்றி தமிழக மக்களின் வாழ்வாதாரத்தையும்,பொருளாதாரத்தையும் செழிப்பாக்கவேண்டும். அப்படியில்லையெனில் எந்த அரசு அதனை செய்ய முன்வருகின்றதோ அந்த அரசிற்கே நமது ஓட்டு என்று மக்களாகிய நாம் முடிவுசெய்ய வேண்டும் என்பதை இங்கு நினைவூட்டிக்கொண்டு அடுத்தபடியாக தமிழக மக்களுக்கு மூன்றாவதாக மிகமுக்கிய தேவை என்ன என்பது குறித்து பதிவுசெய்கின்றேன்.
3.பெண்களின் பாதுகாப்பு உறுதிசெய்யப்பட வேண்டும்.
தற்போதைய நிலையில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள்,கற்பலிப்புகள் அதிகமதிகம் நடந்தேறிக்கொண்டே இருக்கின்றது.அதிலும் குறிப்பாக குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்வது அல்லது அவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்குவது போன்ற குற்றங்கள் எங்கு பார்த்தாலும் நடந்தேறிக்கொண்டே இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றது.இத்தகைய நிலை தமிழக மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை உண்டாக்கிவருகின்றது.இதனை கட்டுக்குள் கொண்டுவர கூட்டு பாலியல் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் அல்லது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக அவர்களின் குற்றம் உறுதியானால் அதிகபட்ச தண்டனையாக தூக்குதண்டனை வழங்க அரசு சட்டம் இயற்ற வேண்டும்.
தமிழகத்தில் பெண்களின் மீது கைவைத்தால் அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்ற சூழலை உறுவாக்க தற்போதைய அரசு உறுதியேற்க வேண்டும்.தற்போதைய தமிழக திமுக அரசு பெண்களுக்கு பல்வேறு விதங்களில் உதவிகள் பல செய்துவந்தாலும் பெண்களின் பாதுகாப்பு சம்மந்தமாகவும் கவனம் செலுத்த கடமைபட்டிருக்கின்றது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.அந்த வகையில் பெண்களுக்கெதிரான பாலியல் சீண்டல்கள் சார்ந்த குற்றங்கள் நிரூபனம் ஆணால் அவர்களுக்கு கடினமான தண்டனை வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.
அவ்வாறு சட்டம் இயற்றி பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத்தவறினால் அத்தகைய அரசை முடிவிற்குகொண்டுவந்து எந்த அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்கின்றதோ அதற்கு மட்டுமே நமது ஓட்டு என்பதை மக்களாகிய நாம் உறுதிபடுத்தவேண்டும் என்பதை இங்கு பதிவு செய்துகொண்டு அடுத்தபடியாக தமிழக மக்களின் நான்காவது மிக முக்கியதேவை என்ன என்பது குறித்து பதிவுசெய்கின்றேன்.
4.போதை பொருட்கள் வினியோகத்திற்கு எதிராக கடுமையான சட்டம் வேண்டும்.
தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல்,மற்றும் விற்பனை, இன்று மிகப்பெரும் பிரச்சினையாக உறுவெடுத்துவருகின்றது.கடந்த 11 மாதங்களில் 1,411 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டவர்கள் உள்பட 3778 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் 61,627 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து 129 கொக்கைன், மெத்அம்பட்டமின் போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.இவற்றில் குறிப்பாக சினிமாத்துறையில் உள்ள நடிகர்கள் மற்றும் அவர்களின் வாரிசுகள் குறிவைத்து விற்பனைக்குள்ளாக்கப்படுவதும் அவர்களையே சப்ளையர்களாக உறுவாக்கும் நிலையும் தொடர்ந்துவருகின்றது.இத்தகைய நிலை இந்திய மக்களை குறிப்பாக தமிழக மக்களை மிகப்பெரும் சமூக சீர்கேட்டில் தள்ளிவிடுவதற்கான முயற்சியாகவே நான் காண்கின்றேன்.எனவே இதனை தற்போதைய அரசு கவனத்தில் கொண்டு போதைபொருள் கடத்துபவர்களை மற்றும் விற்பனைசெய்பவர்களை அடையாளம் கண்டு மிக கடுமையான தண்டனை வழங்க சட்டம் இயற்ற வேண்டும்.
மேலும் மது விற்பனையால் தமிழகத்தில் அரசிற்கு மிகப்பெரும் லாபம் வருகின்றது என்பதற்காக மக்களை சிறிதுசிறிதாக கொலை செய்யக்கூடிய மதுபானம் மற்றும் குட்கா போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்கு பதிலாக அரசு மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த பானங்களையும்,பொருட்களையும் உற்பத்தி செய்து விற்பனைசெய்ய முன்வரவேண்டும்.அதனால் மது போன்ற போதை தரும் பொருட்களை உட்கொள்பவர்களால் ஏற்படும் குற்றங்கள் குறைந்து அரசுக்கு வருமானமும் பெருகி சிறந்ததொரு சமூக கட்டமைப்பையும் கட்டி எழுப்பிய சிறப்புகிடைக்கும் என்பதை கருத்தில்கொள்ள வேண்டும்.
மேலும் போதை பொருள் கட்டுப்பாடிற்கென்று தனிப்படைகள் அமைத்து அதனை விற்பனை செய்பவர்கள் மற்றும் பாவிப்பவர்கள் ஆகியோர்களை இனம் காண்பதோடுமட்டுமல்லாமல் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்றவேண்டும்.அவ்வாறு செய்யவில்லையெனில் எந்த அரசு இதனை செயல்படுத்த முன்வருகின்றதோ அதற்குத்தான் என் ஓட்டு என்று மக்களாகிய நாம் முடிவுசெய்ய வேண்டும் என்பதை தாழ்வன்போடு இங்கு பதிவு செய்துகொண்டு தமிழக மக்களுக்கு கடைசியாக ஐந்தாவது மிகமுக்கிய தேவை என்ன என்பதையும் பதிவுசெய்துவிடுகின்றேன்.
5.அரசு வழங்கும் நலத்திட்டங்களில் ஊழல்களை கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை அரசு இயற்ற வேண்டும்.
தமிழகத்தில் தற்போது அரசு அலுவலகங்கள்,டென்டர்கள், கட்டுமானப்பணிகள்,கல்விக்கூடங்கள்,மருத்துவமனைகள் என எல்லா புறங்களிலும் ஊழல் தலைவிரித்தாடுகின்றது.அரசு சார்ந்த எந்த துறையென்றாலும் அவற்றில் ஒரு அலட்சியமும் போதுமான செயல்பாடின்மையும் தற்போதைய நிலையில் மிகப்பெரும் நோய்தொற்றாக நிலவிவருகின்றது.இத்தகைய நிலை அரசின் மீது மிகப்பெரும் அதிர்ப்தியை மக்களுக்கு ஏற்படுத்துயும் வருகின்றது.அவை மட்டுமின்றி இலவசமாகவோ அல்லது சிறிய கட்டணம் செலுத்தியோ அரசு செய்துதர வேண்டிய காரியங்களை அரசு அலுவலர்கள் பல ஆயிரங்கள் இலஞ்சம் பெற்றுக்கொண்டு செய்துகொடுப்பதை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட கடுமையான சட்டம் இயற்றவேண்டிய மிக முக்கியமான தேவை தற்போதைய தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏழை மாணவர்கள் படித்து பயன்பெறுவதற்காக பல்லாயிரக்கணக்கான பள்ளிகளை அரசு நடத்திவருகின்றது.ஆனால் அவற்றில் ஆசிரியர்கள் பற்றாக்குரையால் அங்கு படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு கல்வியில் மிகப்பெரும் பின்னடைவு ஏற்படுகின்றது. அத்தோடு பல்வேறு கல்விக்கூடங்களில் ஆசிரியர்கள் தங்கள் பணியை சரிவர செய்யாமல் மாணவர்களின் கல்வியை பாலடித்துவருகின்றார்கள்.இத்தகைய நிலைகள் கலையப்படுவதற்கு அரசு கட்டாயம் வழிவகை செய்யவேண்டும். அவைமட்டுமின்றி தமிழகத்தில் பல ஆயிரம் சுகாதார மையங்களும்,அரசு மருத்துவமனைகளும் கட்டப்பட்டுள்ளது.ஆனால் அவற்றில் பணியாற்றுவதற்கு போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை.இதனால் மக்கள் அரசு மருத்துவமனைக்கே செல்லமுடியாத அளவிற்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.
குறிப்பாக நகர்புறங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் வேண்டுமென்றே மருத்துவர்கள் பணிசெய்யாமல் இருப்பது அல்லது தங்கள் பணியில் மிகப்பொடுபோக்காக செயல்படுவது போன்ற செயல்கள் அதிகமதிகம் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.இவற்றிற்கெல்லாம் தீர்வு காண எந்த அரசு முன்வருகின்றதோ அந்த அரசிற்குத்தான் இந்த சட்டமன்ற தேர்தலில் எங்களது ஓட்டு என்று மக்களாகிய நாம் உறுதியேற்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இறுதியாக இக்கட்டுரையின் முடிவுரைக்கு வருகின்றேன்.
முடிவுரை:
அன்பு நண்பர்களே.! 2026- சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட இந்த அரசியல் தலைவருக்கு ஓட்டுப்போடுங்கள் என்றோ அல்லது புதிதாக வந்திருக்கும் அந்த அரசியல் தலைவருக்கு ஓட்டுப்போடுங்கள் என்றோ சுட்டிக்காண்பிப்பது என்னுடைய நோக்கமல்ல.மாறாக மக்களாகிய நாம் மனநிறைவோடும் அடிப்படை வசதிகளோடும் கலவரங்கள் மற்றும் அடக்குமுறைகளின்றி அமைதியாக வாழ எந்த ஆட்சியாளர்கள் வழிவகை செய்கின்றார்களோ அவர்களுக்குத்தான் நம் ஓட்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதையே இக்கட்டுரை மூலமாக நான் வலியுறுத்த விரும்புகின்றேன்.
நிச்சயம் இக்கட்டுரை தற்போதைய நிலையில் தமிழகத்தில் யாருக்கு ஓட்டுப்போடுவது என்று யோசித்துக் கொண்டிருக்கும் நண்ப,நண்பிகளுக்கு மிக பிரயோஜனமிக்கதாக அமையும் என்றே ஆதரவு வைக்கின்றேன்.எல்லாம் வல்ல இறைவன் சிறந்த ஆட்சியாளரை நமக்கு வழங்கி நம் வாழ்வில் எல்லா வளங்கலோடும் மனநிறைவோடும் வாழ வழிவகை செய்வானாக என்று என்றென்றும் பிரார்த்திக்கின்றேன்.
நன்றி:
Author.A.Sadam husain hasani
